டில்லியில் சட்டவிரோத குடியேற்றம்; வெளிநாட்டினர் 132 பேர் நாடு கடத்தல்!
5 தை 2025 ஞாயிறு 05:15 | பார்வைகள் : 804
டில்லியில் சட்டவிரோதமாக குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாட்டினர் 8 பெண்கள் உட்பட 132 பேர் நாடு கடத்தப்பட்டனர்.\
டில்லியில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், டில்லியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கி உள்ளதாகவும் அவர்களை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அரசியல் கட்சிகளும் கவலை தெரிவித்து இருந்தன.
இதனையடுத்து பள்ளி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையின் போது சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து அடையாளம் காண வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், டில்லி போலீசார் வீடு வீடாக சென்று சோதனை நடத்தியதுடன், ஆவணங்களையும் சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, 2024ம் ஆண்டு டில்லியில் சட்டவிரோதமாக குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாட்டினர் 132 பேர் நாடு கடத்தப்பட்டனர். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் அங்கித் சிங் கூறியதாவது: டில்லியில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாட்டினர் 132 பேர் நாடு கடத்தப்பட்டனர். அவர்களிடம் ஆவணங்கள் ஏதுமில்லை.
நாடு கடத்தப்பட்டவர்களில் 116 பேர் நைஜீரியர்கள், ஐவரி கோஸ்ட்டில் இருந்து 7 பேர், கினியா மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த தலா மூன்று பேர், கானா மற்றும் உகாண்டாவில் இருந்து தலா இரண்டு பேர், செனகலில் இருந்து ஒருவர் என மொத்தம் 132 ஆவர். இதில் எட்டு பெண்களும் அடங்குவர். அவர்களில் ஐந்து நைஜீரிய பெண்களும், மூன்று உஸ்பெக் பெண்களும் அடங்குவர். நாடு கடத்தப்பட்டவர்கள் குடிசைகள், அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வாழ்ந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.