மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 300 பேருடன் படகுகள்
5 தை 2025 ஞாயிறு 17:12 | பார்வைகள் : 1543
மலேசியா அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட மியன்மார் குடியேற்றவாசிகள் கொண்ட இரண்டு படகுகளை மலேசியாவுக்குள் நுழைய முயன்ற நிலையில் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த 300க்கும் மேற்பட்ட மியன்மார் குடியேற்றவாசிகள் போதிய உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்ட நிலையில் அவர்களை மலேசியா கரையோர காவல் படையின் படகுகள் பாதுகாப்பாக மலேசிய எல்லைக்கு வெளியே கொண்டு சென்று விட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த படகுகள், மலேசியாவின் லாங்கவி தீவிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் காணப்பட்டதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கியதாகவும் மலேசிய அதிகாரிகள் கூறினர்.
படகுகளின் பயணத்தை பற்றி தகவல்களை பெற்றுக் கொள்ள, மலேசியா அதிகாரிகள் தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரிவித்தனர். மலேசிய கரையோர காவல்படையினர், படகில் இருந்தவர்கள் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களா என்பதை உறுதியாக கூறவில்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை, மலேசியாவின் லாங்கவியில் கரையிறங்கிய 196 மியன்மார் குடியேற்றவாசிகளை மலேசியா போலீசார் கைதுசெய்தனர். இதில் 71 சிறுவர்கள் உள்ளதாகவும், இவர்கள் ரோகிங்யா குடியேற்றவாசிகள் என கூறப்பட்டதாகவும் மலேசியா அதிகாரிகள் தெரிவித்தனர்.