சாராய வியாபாரிகளுக்கு அரணாக செயல்படும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
6 தை 2025 திங்கள் 03:07 | பார்வைகள் : 277
மக்களுக்கு அரணாக செயல்பட வேண்டிய தி.மு.க., அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த 3ம் தேதி மதுரையில் நீதிப் பேரணியில் பங்கேற்க சென்ற திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., மகளிர் அணியினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை பார்க்க சென்ற திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் பழனி கனகராஜ்,அருகில்இருந்த தனியார் மதுபானக் கூடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்று, சட்டவிரோதமாக அங்கு மதுபானம் விற்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு போலீசாரை விமர்சனம் செய்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, ஊழியர்களை தாக்கியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பழனி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பழநி கொடைக்கானல் சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தனியார் மதுக்கடையைக் காலை 8 மணிக்கே திறந்து வைத்து மது விற்பனை செய்ததை பா.ஜ.,வின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ், ஊடகங்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தியதற்காக அவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்று அவசர அவசரமாகக் கைது செய்திருக்கிறார்கள். இந்த கைது சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களுக்கு அரணாகச் செயல்பட வேண்டிய தி.மு.க., அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகக் காவல்துறையும் தி.மு.க.,வின் ஒரு பிரிவு போல் செயல்படாமல் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.