அரசை விமர்சித்த கூட்டணி கட்சிக்கு... தி.மு.க., கண்டனம்: எதிரிகளின் சதிக்கு துணை போவதா?
6 தை 2025 திங்கள் 03:09 | பார்வைகள் : 323
கூட்டணி கட்சிகளின் விமர்சனம் குறித்து, தி.மு.க., அதிருப்தி தெரிவித்துள்ளது. 'விளைவுகளை பற்றி கவலைப்படாமல் கருத்து சொல்வது தோழமைக்கு இலக்கணம் அல்ல' என, அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழில் எச்சரிக்கை கட்டுரை வெளியாகி உள்ளது.
'இது தோழமைக்கு இலக்கணம் அல்ல' என்ற தலைப்பில், 'முரசொலி' நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அவசர நிலை பிரகடனமா?' என்று, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு, 'தினமலர்' நாளிதழ் கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்கும் போதே, தி.மு.க., ஆட்சிக்கு எதிரான சதிக் கூட்டத்துக்கு, அவர் தீனி போடத்துவங்கி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
சீண்டிப்பார்ப்பதா?
'முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாக கேட்கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?' என்று கேட்டிருக்கிறார் கே.பி., அவரை பேசவிடாமல் தடுத்துள்ளனரா? இல்லையே. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டு தான் அவரே பேசுகிறார்.
முதல்வரை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர், ஏன் விழுப்புரம் வீதியில் நின்று இப்படி கேட்க வேண்டும்? தோழமையுடனும், மதிப்பளித்தும் செயல்படும் முதல்வரை சீண்டிப் பார்க்க வேண்டிய நெருக்கடியும் நிர்பந்தமும் அவருக்கு இருக்கலாம்.
தமிழகத்தில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கவில்லையா? டிசம்பர் 28ம் தேதி, 'தீக்கதிர்' நாளிதழில் இதே பாலகிருஷ்ணன் கட்டுரை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களை அதில் பட்டியலிட்டுஉள்ளார். 23 வகையான போராட்டங்களை நடத்தியதாக பாலகிருஷ்ணன் மார்தட்டி கொள்கிறார். பின்னர், போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் அவரே கேட்கிறார்.
இத்தனை போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது உண்மை என்றால், அவற்றுக்கெல்லாம் அனுமதி அளித்தது, இவர் கேள்வி கேட்கிறாரே அதே முதல்வர் தானே? அவசர நிலை இருந்தால், ஒரு போராட்டமாவது நடத்தி இருக்க முடியுமா?
போராட்டமும் நடத்தி விட்டு, போராட அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல; அரசியல் அறமும் அல்ல; மனசாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னை சுடாதா?
துடிக்கின்றனர்
ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, 'தமிழகத்தில் மாணவியருக்குப் பாதுகாப்பே இல்லை' என்ற, 'ட்ரெண்ட்'டை உருவாக்க துடிக்கின்றனர் சிலர்.
அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அதற்கு அவசியம் என்ன?
'தமிழகத்தில் பட்டியலின அடக்குமுறை அதிகமாக உள்ளது; ஆணவ கொலைகள் அதிகமாக நடக்கின்றன; ஈ.வெ.ரா., கொள்கைகள் திராவிட இயக்க ஆட்சிகளில் நீர்த்துப் போய்விட்டன.
'போலீஸ் துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது...' என்று வாய்க்கு வந்ததை பாலகிருஷ்ணன் பேசினால் கிடைக்கும் முக்கியத்துவம் என்பது, அந்த பேச்சுக்கானது அல்ல. அது, தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும் வெளிச்சம் மட்டுமே.
தி.மு.க., தரப்பில் வரிக்கு வரி பதிலளிப்பது இல்லை என்பதையே பலவீனமாக நினைத்து விட்டனர் போலும்!
எதிரிக்கட்சியாக நடந்து கொண்டு, எடுத்தெறிந்து பேசினால் தான் கவனம் கிடைக்கும் என்று பேசும் பேச்சுகள் ஏற்படுத்தும் பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் போவது, தோழமைக்கான இலக்கணம் அல்ல. அது தோழமையை சிதைக்கும். விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை.
இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.