அரசு தேர்வில் முறைகேடு; உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர் கைது!
6 தை 2025 திங்கள் 03:24 | பார்வைகள் : 305
அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, பீஹார் மாநிலம் பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோரை பாட்னா போலீசார் கைது செய்தனர்.
பீஹார் தேர்வாணைய பணியாளர் வாரியம் கடந்த டிச., மாதம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 2 நாட்களுக்கு முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரை இன்று காலை பாட்னா போலீசார் கைது செய்தனர்.
வலுக்கட்டாயமாக போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போராட்ட களத்தில் இருந்து பிரசாந்த் கிஷோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த போது, அவரது ஆதரவாளர்கள் வந்தே மாதரம் என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என தேர்வாணைய பணியாளர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஆதர்வாளர்கள் 150 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யதுள்ளனர். இந்த போராட்டம் சட்ட விரோதம் என போலீசார் தெரிவித்தனர்.