நோய் எதிர்ப்பு சக்தியை வலுபடுத்துவது எப்படி..?
6 தை 2025 திங்கள் 15:42 | பார்வைகள் : 284
குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நமது நோயெதிர்ப்பு அமைப்பு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. இது ஜலதோஷம் போன்ற பருவகால நோய்களுக்கு வருவதற்கு காரணமாக இருக்கிறது. நோயின் அபாயத்தை முற்றிலுமாக அகற்றுவது சாத்தியமற்றது என்றாலும், சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை கணிசமாக வலுப்படுத்தும். இது குளிர்காலங்களில் ஆரோக்கியமாகவும் எதையும் தாங்கும் திறனுடனும் இருக்க உதவுகிறது.
சரியான அணுகுமுறையுடன், உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பை நீங்கள் அதிகரிக்க முடியும். குளிர்ச்சிக்கு எதிராக உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றிய குறிப்புகளை ஆர்ட்டெமிஸ் மருத்துவமணையின் உள் மருத்துவம் மூத்த ஆலோசகர், டாக்டர் பி வெங்கட கிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்:
சமச்சீர் ஊட்டச்சத்து : நோயெதிர்ப்புக்கு சாதகமான உணவு முக்கியமானது. இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்திருக்க வேண்டும். சிட்ரஸ் பழங்கள், குடை மிளகாய் மற்றும் பச்சை இலை கீரைகளில் இருந்து நமக்கு இவையெல்லாம் கிடைக்கிறது. தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய அங்கம் வகிக்கும் நம்முடைய வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
நட்ஸ், விதைகள் மற்றும் மட்டி (சிப்பி வகை) போன்ற உணவுகள் மூலம் துத்தநாகம் கிடைக்கிறது. நோயெதிர்ப்பு உயிரணு செயல்பாடை மேம்படுத்துவதற்கு இந்த தாது முக்கியமானது. தயிர் போன்ற புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள், வலுவான குடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
சீரான உடல் இயக்கம் : மிதமான உடற்பயிற்சி, விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் டி-செல்கள் உட்பட நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இருப்பினும், தீவிரமான உடற்பயிற்சி நோயெதிர்ப்பு செயல்பாட்டை தற்காலிகமாக அடக்குகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
போதுமான தூக்கம் : நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தூக்கம் அவசியம். ஆழ்ந்து தூக்கத்தின் போது உடல் சைட்டோகைன்களை உற்பத்தி செய்கிறது. இது நோய்த்தொற்றுகள் மற்றும் வீக்கத்தை குறிவைக்கும் புரதங்கள் ஆகும். உகந்த நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்க இரவில் 7-9 மணிநேர இடைவிடாத தூக்கத்தை அடைய முயற்சிக்கவும்.
நீர்ச்சத்து : உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது நோயெதிர்ப்பு அமைப்பு உட்பட உடலில் உள்ள ஒவ்வொரு அமைப்பையும் ஆதரிக்கும். நீர் சுவாச அமைப்பில் சளி சவ்வுகளை பராமரிக்க உதவுகிறது. இது குளிர்கால வைரஸ்களுக்கு எதிராக தடையாக செயல்படுகிறது.
சுருக்கமாக கூறினால், ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், நீர்ச்சத்து மற்றும் சரியான மன அழுத்த மேலாண்மை ஆகியவை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பை பருவகால நோய்களை சரியான நேரத்தில் எதிர்த்துப் போராடுவதை உறுதிசெய்யும்.