Paristamil Navigation Paristamil advert login

உரையை வாசிக்காமலே கவர்னர் வெளிநடப்பு ...

உரையை வாசிக்காமலே கவர்னர் வெளிநடப்பு ...

7 தை 2025 செவ்வாய் 03:57 | பார்வைகள் : 391


சட்டசபையில் தன் உரையை படிக்காமல், மூன்று நிமிடங்களில் கவர்னர் ரவி வெளியேறினார்.

தமிழக சட்டசபை, கவர்னர் உரையுடன், 6ம் தேதி துவங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு கவர்னர் ரவியும் ஒப்புதல் அளித்திருந்தார். கவர்னரை சந்தித்து, சட்டசபையில் உரையாற்று வருமாறு சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்திருந்தார்.

போலீஸ் மரியாதை


அதன்படி, நேற்று காலை 9:30 மணிக்கு சபை துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. காலை, 9:00 மணிக்கு பின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வந்து தங்களது இருக்கையில் அமர்ந்தனர். முதல்வர் ஸ்டாலின், 9:20க்கு வந்து அமர்ந்தார். கவர்னர் ரவி, தலைமை செயலக வளாகத்திற்கு காலை 9:23 மணிக்கு வந்தார். பேண்ட் வாத்தியத்துடன், அவருக்கு போலீஸ் மரியாதை

அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து, பொன்னாடை, புத்தகம் பரிசளித்து வரவேற்றனர்.கவர்னருடன் அவரது செயலர் கிர்லோஷ்குமார் உடன் இருந்தார். சரியாக 9.29 மணிக்கு சபைக்கு கவர்னர் வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

இதை தொடர்ந்து, தன் உரையை கவர்னர் வாசிக்க முயன்றார். அதற்கு, அ.தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்து தேசிய கீதத்தை வாசிக்கச் செய்ய கவர்னர் முயற்சி செய்தார். ஆனால், தேசிய கீதம் வாசிக்கப்படவில்லை. கோஷங்கள் தொடர்ந்தன. இதையடுத்து, மூன்று நிமிடங்களில் தன் உரையை வாசிக்காமல், சபையை விட்டு கவர்னர் வெளியேறினார். அச்சிடப்பட்ட கவர்னர் உரையில் இடம் பெற்ற வாசகங்களை, சபாநாயகர் அப்பாவு படித்தார்.

குரல் ஓட்டெடுப்பு


அவர் படித்ததை மட்டும் சபைக்குறிப்பில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை, சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் கொண்டு வந்தார். குரல் ஓட்டெடுப்பு வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 10.44 மணிக்கு சபை நிகழ்ச்சிகள் முடிவுற்றன.

இன்னும் பதவியில் இருப்பது ஏன்?


அரசியல் சட்டப்படி, ஆண்டின் துவக்கத்தில் அரசின் உரையை கவர்னர் வாசிப்பது, சட்டசபை ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தன் வழக்கமாக வைத்துள்ளார் கவர்னர் ரவி. கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த கவர்னர், இந்த முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நுாற்றாண்டு கண்ட தமிழக சட்டசபையையும் தொடர்ந்து அவமதிக்கும் கவர்னரின் செயல், அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தன் அரசியல் சட்ட கடமைகளை செய்யவே மனமில்லாத கவர்னர், அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே, அனைவரது மனதிலும் எழும் கேள்வி.- ஸ்டாலின்முதல்வர்

காங்கிரஸ் புறக்கணிப்பு ஏன்?


தமிழக காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான செல்வப்பெருந்தகை கூறியதாவது:அண்ணா பல்கலையில் நடக்கக்கூடாத அவமானகரமான சம்பவம் நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்; அண்ணா பல்கலை உட்பட பல பல்கலைகளில் துணை வேந்தர்கள் இல்லை. துணை வேந்தர் பதவி என்பது நிர்வாகத்தின் முதன்மையான பொறுப்பு.

துணை வேந்தர் இல்லை என்பதால், அங்கே இப்படிபட்ட தவறுகள் நடப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. துணை வேந்தரை நியமிக்க கவர்னர் மறுக்கிறார். பல விஷயங்களில் தமிழக கலை, கலாசாரத்திற்கு எதிராகவும், பா.ஜ., ஊதுகுழலாகவும் இருக்கிறார். அதை கண்டித்து சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.


அவசர காலத்தை நினைவூட்டுகிறது!'


சட்டசபை நிகழ்வு குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:தமிழக சட்டசபை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டு இருப்பது, அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. சட்டசபையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை, தமிழக சகோதர -- சகோதரிகள் அறிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக, மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

தேசிய கீதம் தொடர்பான அடிப்படை கடமையை புறக்கணிப்பதன் வாயிலாக, அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும், வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டுள்ளது. இது,

ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 'யார் அந்த சார்?' பேட்ஜ்


'யார் அந்த சார்?' என்ற வாசகம் அச்சிடப்பட்ட, 'பேட்ஜ்' அணிந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், 'யார் அந்த சார்?' என்ற கேள்வியை மையமாக வைத்து, அ.தி.மு.க., போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சட்டசபையில் பங்கேற்க வந்த அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அந்த வாசகம் அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்தனர்.


வேதனையுடன் வெளியேறினார் கவர்னர் சட்டசபை நிகழ்வு குறித்து விளக்கம்


'தேசிய கீதத்தை பாடாமல் அவமதித்ததால், கவர்னர் ரவி வேதனையுடன் சட்டசபையை விட்டு வெளியேறினார்' என, கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ் மொழி மற்றும் மாநிலத்தின் வளமான கலாசாரம், மரபுகள், பாரம்பரியத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத மரியாதை

மற்றும் போற்றுதலை, கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் புனிதத்தை எப்போதும் நிலைநாட்டி, ஒவ்வொரு நிகழ்விலும் மரியாதையுடன் அவர் பாடி வருகிறார். உலகின் மிக பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற தமிழ் மொழி, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. மாநிலத்திலும், தேசிய அளவிலும், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கு, கவர்னர் பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகிறார்.

அரசியலமைப்பு சட்டத்தை மதித்து, அரசியல் சட்ட கடமைகளை பின்பற்றுவது கவர்னரின் கடமை. இந்திய நாட்டின் பெருமையான தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமை.

ஒவ்வொரு மாநில சட்டசபையிலும், கவர்னர் உரையின் துவக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதத்திற்குரிய விதிமுறைகளின்படி இது அவசியம். பலமுறை முன்கூட்டியே இதற்கான நினைவூட்டல்களை தெரிவித்த பின்னரும், இந்த கோரிக்கைகளை வேண்டுமென்றே தமிழக சட்டசபை புறக்கணித்துள்ளது துரதிருஷ்டவசமானது.

கவர்னர் உரையின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் இருந்த போது, அரசியலமைப்பு கடமைகளை மரியாதையுடன் நினைவூட்டி, முதல்வர் மற்றும் சபாநாயகரை தேசிய கீதம் பாடுவதற்கு, கவர்னர் வேண்டுகோள் விடுத்தார். அவரின் கோரிக்கை திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.

கவர்னர் உரையின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது, அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். இதனால், கவர்னர் வேதனையுடன் சட்டசபையை விட்டு வெளியேறினார்.இந்திய அரசியலமைப்பு மேன்மையை போற்றவும், அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய கீதத்திற்கான மரியாதையை மீட்டெடுக்கவும், தமிழ் மொழியின் பெருமையை நிலைநிறுத்தவும் தன் நிலைப்பாட்டில் கவர்னர் உறுதியாகவுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்