Paristamil Navigation Paristamil advert login

'ஜனநாயகன்' படத்துடன் மோதும் 'பராசக்தி'?

'ஜனநாயகன்' படத்துடன் மோதும் 'பராசக்தி'?

11 மாசி 2025 செவ்வாய் 14:20 | பார்வைகள் : 257


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடுந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான 'அமரன்' திரைப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. நடிகர் சிவகார்த்திகேயன் திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்த திரைப்படத்தை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த நிலையில்... உலக நாயகன் கமலஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

மேலும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார்.  இப்படம் சென்னையைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மட்டும் இன்றி, இந்த திரைப்படத்திற்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம், ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் பயோ பிக் கதையில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். பராசக்தி என பேரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் பீரியாடிக் படமாக உருவாகி வருகிறது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும், பத்திரிக்கையாசிரியராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சுதா கொங்கரா படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாக விடக்கூடாது என்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட சுதா கொங்கரா முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தையும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய பட குழுவினர் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக சிவகார்த்திகேயன் பராசக்தி மற்றும் ஜனநாயகன் திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் எந்த காரணத்தை முன்னிட்டும் தளபதி விஜய் உடன் மோதி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும், எனவே பொங்கல் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகிறது.

தற்போது தளபதி விஜய்யின் திரைப்படமான ஜனநாயகம் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் ஹச் வினோத் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிரியாமணி, கௌதம் மேனன்,  மமீதா பைஜூ,  பாபி தியோல், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் கூலி படத்தை தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரத்தில் ஸ்ருதி ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்க பட உள்ளதாம்.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்