புனேவை அச்சுறுத்தும் ஜி.பி.எஸ்.,: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
![புனேவை அச்சுறுத்தும் ஜி.பி.எஸ்.,: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு](ptmin/uploads/news/India_rathna_gps-virus.jpg)
12 மாசி 2025 புதன் 02:48 | பார்வைகள் : 232
மஹாராஷ்டிராவில், ஜி.பி.எஸ்., எனப்படும் கிலன் பா சிண்ட்ரோம் பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இதுதவிர, 167 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நரம்பியல் பாதிப்பு
மஹாராஷ்டிராவின் புனேவில், ஜி.பி.எஸ்., என்றழைக்கப்படும் கிலன் பா சிண்ட்ரோம் பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. அரியவகை நரம்பியல் பாதிப்பு காரணமாக இதுவரை 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 48 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது; 21 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில், புனேவில் 37 வயதான டிரைவர் ஒருவர் ஜி.பி.எஸ்., பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டது. முன்னதாக, அவர் மூட்டு வலியால் அவதியடைந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும், தொடர்ந்து அவருக்கு வலி நீடித்ததால் சங்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாரடைப்பு
அப்போது அந்த டிரைவருக்கு ஜி.பி.எஸ்., பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், டாக்டர்களின் அறிவுறுத்தலையும் மீறி பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் இருந்து அவரது உறவினர் டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்றார்.
பின், புனே மாநகராட்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த 5ம் தேதி அனுமதித்தார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது அவருக்கு, இதய துடிப்பு குறைய துவங்கியது.
எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 9ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, ஜி.பி.எஸ்., பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
![](/images/engadapodiyalxy.jpg)