கார்த்தி வெளிநாடு செல்வது எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் ! சி.பி.ஐ., முறையீடு
![கார்த்தி வெளிநாடு செல்வது எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் ! சி.பி.ஐ., முறையீடு](ptmin/uploads/news/India_rathna_karthi-chidambaram.jpg)
12 மாசி 2025 புதன் 02:49 | பார்வைகள் : 262
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு சர்வதேச அளவில் தொடர்புடையது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காங்., - எம்.பி., கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது எங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தரப்பு முறையிட்டுள்ளது.
அன்னிய முதலீடு
ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து அன்னிய முதலீடு பெற்றுக்கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதில், இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் கார்த்தி வெளிநாடு செல்லும் முன் சி.பி.ஐ.,யிடம் அனுமதி பெற வேண்டும் என, நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த போது கார்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'கார்த்திக்கு எதிராக எந்த விசாரணையும் நிலுவையில் இல்லை. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் விசாரணை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் இந்த வழக்கு சர்வதேச அளவில் தொடர்புடையது.
அனுமதி
'எனவே குறைந்தபட்சம் கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியுமா, முடியாதா என்ற கட்டுப்பாட்டை சி.பி.ஐ., வசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது' என வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கி, வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
![](/images/engadapodiyalxy.jpg)