பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி கவிழுமா?
![பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி கவிழுமா?](ptmin/uploads/news/India_rathna_aam-athmi-punjab.jpg)
12 மாசி 2025 புதன் 02:59 | பார்வைகள் : 247
டில்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்குள் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலர் அதிருப்தியில் உள்ளதால், பஞ்சாபில் அக்கட்சியின் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
டில்லி சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், 48ல் வென்று, 27 ஆண்டுக்குப் பின், பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது. தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
மதுபான ஊழல் வழக்கில் சிறை சென்றதால், டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலகிய, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், புதுடில்லி சட்டசபை தொகுதியில் அவர் தோல்வியடைந்தது, மிகப் பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், முதல்வர், எம்.பி., - எம்.எல்.ஏ., என்று எந்த பதவியிலும் கெஜ்ரிவால் இல்லை.
ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் காலியாக உள்ள லுாதியானா சட்டசபை தொகுதிக்கு விரைவில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிடலாம் என்றும், பஞ்சாப் முதல்வராக அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.
இதைத் தவிர, பஞ்சாபில் இருந்து ராஜ்யசபாவுக்கு எம்.பி.,யாவது குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்த சூழ்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், 91 எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு வரும்படி கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். தன் இல்லத்தில் அவர்களை கெஜ்ரிவால் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டில்லி சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், பா.ஜ., ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்தது. அப்போது, பஞ்சாப் காங்., தலைவர் பிரதாப் சிங் பஜ்வா பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில், 'டில்லியில் ஆம் ஆத்மி தோல்வியடைந்தால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல் ஆளாக அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேருவார்' என, கூறியிருந்தார்.
மேலும், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், கட்சியில் இருந்து கூண்டாக வெளியேற அவர்கள் தயாராக உள்ளதாகவும், பஜ்வா கூறியிருந்தார்.
கடந்த 2022ல் பஞ்சாப் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 117 இடங்களில், ஆம் ஆத்மி 92ல் வென்றது. காங்கிரஸ், 18ல் வென்றது. அகாலிதளம், மூன்று இடங்களைப் பிடித்தது.
டில்லி தோல்வியையடுத்து, கட்சியின் பஞ்சாப் பிரிவில் பலர் அதிருப்தியில் உள்ளதாகவும், எம்.எல்.ஏ.,க்கள் பலர் கூண்டோடு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.
இதனால், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி கவிழலாம் என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்தே, அவர்களை கெஜ்ரிவால் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
எந்த குழப்பமும் இல்லை!
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்குப் பின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று கூறியுள்ளதாவது:கட்சி மாறுவது என்பது காங்கிரசின் கலாசாரம். ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவில் எந்தக் குழப்பமும் இல்லை. அனைவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சி கவிழவோ, ஆட்சி மாற்றம் ஏற்படவோ வாய்ப்பில்லை.ஆம் ஆத்மியின், 30 - 40 எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என, காங்கிரசின் பிரதாப் சிங் பஜ்வா இதற்கு முன்பும் கூறியுள்ளார். அது பொய்யான தகவல்; அதைப் பொருட்படுத்த வேண்டாம். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பற்றி கூறும் காங்கிரசுக்கு டில்லியில் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர்? ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது குறித்து அவர்கள் முதலில் கவலைப்படட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
![](/images/engadapodiyalxy.jpg)