போலி வங்கி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ., தொழில்நுட்பம்: அமித் ஷா
12 மாசி 2025 புதன் 03:02 | பார்வைகள் : 154
சைபர் குற்றங்களை தடுக்க, பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் போலி வங்கிக் கணக்குகளை அடையாளம் காண, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம்' என்ற தலைப்பில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கான பார்லி., ஆலோசனைக் குழுவின் கூட்டம் தலைநகர் டில்லியில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்துக்கு தலைமையேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரைப்படி, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, 805 மொபைல் போன் செயலிகள் மற்றும் 3,266 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும், 19 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 2,038 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டன.
ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளுடன் ஒருங்கிணைந்து, போலி வங்கிக் கணக்குகளை அடையாளம் காண, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக பிரத்யேக குழுவும் அமைக்கப்பட உள்ளது.
நம் நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு விரிவடைந்து வருகிறது. இதனால், இயற்கையாகவே சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
'மென்பொருள், சேவைகள், பயனர்கள்' வாயிலாக சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து நாம் பரிசீலிக்கும் வரை, இந்த பிரச்னைகளை தீர்ப்பது சாத்தியமற்றது.
கடந்த 10 ஆண்டுகளில், 'டிஜிட்டல் புரட்சி'யை நம் நாடு கண்டுள்ளது. தற்போது நாட்டில் 95 சதவீத கிராமங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளன; ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 'வை - பை' ஹாட்ஸ்பாட் வசதிகளுடன் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.