Paristamil Navigation Paristamil advert login

ஏமாற்றத்தை எதிர்பார்ப்பாக்க முயலும் ‘திசைகாட்டி’

ஏமாற்றத்தை எதிர்பார்ப்பாக்க முயலும் ‘திசைகாட்டி’

12 மாசி 2025 புதன் 09:51 | பார்வைகள் : 132


மாற்றம்’ என்ற கோஷத்துடன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான  தேசிய மக்கள்  சக்தியின் ‘திசைகாட்டி’ அரசு பதவியேற்று  3 மாதங்களாகிவிட்ட நிலையில், நாட்டில் பெரியளவான மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத, நாட்டுக்கோ மக்களுக்கோ  புதிய திசைகள் இதுவரையில் காட்டப்படாத  நிலையில், அனுரகுமார அரசிடம் மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்தை அடைந்து வருவதனால் சற்று சுதாரித்துக் கொண்ட அரசு ராஜபக்‌ஷக்களை இலக்கு வைத்து சில நடவடிக்கைகளை எடுத்து மக்களின் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பாக்க முயற்சிக்கின்றது.

நாம் ஆட்சிக்கு வந்தால்  ஊழல், மோசடி செய்த மற்றும் குற்றங்கள் புரிந்த அரசியல்வாதிகள்  சிறை செல்வார்கள், உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவார்கள்  என்று சூளுரைத்து மக்களை உசுப்பேற்றி,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  ஆட்சியக்கைப் பற்றியபோதும்,  இத்தனை நாட்களும்  அனுரகுமார அரசினால் எதனையும் செய்ய முடியவில்லை. அதனால் தமது உறுதிமொழிகள், சூளுரைகள் உசுப்பேற்றல்கள் தொடர்பில்  அடக்கி வாசித்து வந்த அனுரகுமார அரசு, தற்போது ‘மஹிந்தவின் அரச மாளிகை’ ‘ராஜபக்‌ஷக்கள் கைது’ என்ற படங்களை  மக்களுக்குக் காட்டி மக்களைச் சிறிது காலத்துக்கு குஷிப்படுத்த தொடங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் அரச சொகுசு மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அனுரகுமார அரசின் அறிவிப்பால் முன்னாள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு  ‘செக்’ வைக்கப்பட்டது. இதுராஜபக்‌ஷக்களிடையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பொதுஜன பெரமுனவினரை கொதிப்படையவும் வைத்தது.முன்னாள் ஜனாதிபதிகள் அரச  மாளிகைகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அறிவிப்புடன் ராஜபக்‌ஷக்களை  இலக்கு வைத்து அனுரகுமார அரசு காட்டத் தொடங்கியுள்ள இந்தப் படம்,   மக்களைக் கொஞ்சம் கவர்ந்துள்ள நிலையில், அதன் இறுதிக்கட்டம்  ‘அனுதாப அலை’ என்றவகையில், ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவாக மாறி விடக்கூடிய நிலைமையையும் மறுத்து விட முடியாதளவுக்கு அண்மைய சம்பவங்கள் காணப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு கொழும்பு -05 பகுதியில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது. இந்த  வீட்டின் நடைமுறை சந்தை பெறுமதி  2598.5 மில்லியன் ரூபாய். நடைமுறை மாத வாடகை கட்டணம் 1,275,000  ரூபா  இந்த வீட்டிலிருந்து கோட்டபாய  ராஜபக்‌ஷ வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு-07 பெஜ்ஜட் பகுதியில் வழங்கப்பட்டிருந்த வீடு 3,132 மில்லியன் ரூபா பெறுமதியானது. இதன் நடைமுறை சந்தை மாத  வாடகை கட்டணம் 29 இலட்சம் ரூபாய். இந்த வீட்டிலிருந்து ரணில் விக்ரமசிங்கவும் வெளியேறியுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாச கொழும்பு-07 இல் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான வீட்டில் வசித்தார். தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு-07 பகுதியில்  1005.5 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்பட்டது. இவர் இன்றும் இந்த வீட்டில் தான் வசிக்கிறார். அந்த வீட்டின் நடைமுறை சந்தை மாத வாடகை 9  இலட்சம் ரூபாய். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தை வீடு, சுமார்  1 ஏக்கர் 13.8  பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 3,128 மில்லியன் ரூபா பெறுமதியானது.  46 இலட்சம் ரூபா மாத வாடகை பெறுமதியானது. எனவே, இவர்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அனுரகுமார அரசு அறிவித்தது.

இவ்வாறான நிலையில்தான் ‘மாற்றம்’ என்ற கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்றிய அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு செலவு குறைப்பு என்ற பெயரில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள், வரப்பிரசாதங்களில் கை வைத்துள்ளது. மக்களின் வரிப் பணத்தை வீண் செலவுகளிலிருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என அனுரகுமார
அரசு காரணம் கற்பிக்கும் நிலையில், இது மஹிந்த  ராஜபக்‌ஷவை இலக்கு வைத்து அனுர அரசு நடத்தும் அரசியல் பழிவாங்கல் என ராஜபக்‌ஷ தரப்பினரும் அவர்களது கட்சியினரும்  குற்றம் சுமத்துகின்றனர்.

 முன்னாள் ஜனாதிபதிகள் அரச மாளிகைகளிலிருந்து வெளியேற வேண்டும் என அனுரகுமார அரசு விடுத்துள்ள அறிவிப்புக்கு நாட்டு மக்களிடையிலும் அரசியல்வாதிகளிடையிலும் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகின்றன. நாட்டுக்குச் சேவை செய்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கௌரவத்தை அரசு தொடர்ந்தும் வழங்க வேண்டுமென  ஒருதரப்பினரும் மக்களின் வரிப் பணத்தை இவர்களின் ஆடம்பரங்களுக்குச் செலவிடக் கூடாதென இன்னொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளை  அரச  மாளிகைகளிலிருந்து அனுரகுமார அரசு நினைத்தவாறு வெளியேற்ற முடியாது. அதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் தாம் விரும்பினால் மட்டுமே  அரசமாளிகைகளிருந்து வெளியேறலாம் எனவும் சட்ட நிபுணர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதனால் தான் அரச மாளிகையிலிருந்து வெளியேறுங்கள் என  அனுரகுமார அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் வேண்டுகோள் மட்டுமே விடுத்துள்ளதுடன், அவர்களாக வெளியேறும்வகையில் முன்னாள் ஜனாதிபதிகளைக்  குறிப்பாக மஹிந்த ராஜபக்‌ஷவை கடுமையாக விமர்சனம் செய்யும் பிரசார தந்திரத்தையும் முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் அனுரகுமார அரசின் இந்த பிரசாரங்களுக்கு ,சேறு பூசும்  வேலைகளுக்கு “நான் மஹிந்த ராஜபக்‌ஷ” என ஒற்றை வரியில் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, உயர் நீதிமன்றத்தை  நாடியுள்ளதுடன், குறிப்பிட்ட வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அனுரகுமார அரசு எனக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தால் அந்த வீட்டிலிருந்து அடுத்த நிமிடமே வெளியேறத் தயார் எனவும் அறிவித்துள்ளார். ஏனெனில், அவ்வாறு அனுரகுமார அரசினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க அரசியலமைப்பில் இடமில்லை என்பது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தெரியும்.
இவ்வாறான நிலையில்தான் மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது புதல்வரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்‌ஷவை  அதிரடியாகக் கைது செய்து ராஜபக்‌ஷ குடும்பத்திற்கும் பொதுஜன பெரமுனவிற்கும்  குடைச்சல் கொடுக்க  அனுரகுமார அரசு ஆரம்பித்துள்ளது. இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக இடம்பெற்ற  முறைகேடுகள் என்ற குற்றச்சாட்டில்  பணமோசடி சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு, தற்போது   பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்துவரும் நாட்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும்

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பொதுஜன பெரமுன எம்.பியுமான

நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்படலாம் என்ற தகவல்களும் அனுரகுமார

அரசினால் கசிய விடப்படுகின்றன. இவ்வாறான நிலையில், இதனை அடுத்த இரண்டு வாரங்களுக்குள்   நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதாகப் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான  சட்டத்தரணி மனோஜ் கமகேயும்  தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே நாமல் ராஜபக்‌ஷவிற்கு  எதிராகச் சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனுரகுமார அரசின் இவ்வாறான நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ‘மாற்றம்’ என்ற கோஷத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய  தேசிய மக்கள் சக்தி அரசும் பொருளாதார நெருக்கடிகள்,மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கள், இனப்பிரச்சினை என எந்தப்பிரச்சினைகளுக்கும்   எந்த தீர்வுகளுமின்றி , எந்த மாற்றமுமின்றி நாட்களைக் கடத்துவதுடன் கடந்த அரசுகளைப் போன்றே அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு தமது அரசை ஸ்திரப்படுத்தவே முயற்சிப்பதாகவே தெரிகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ராஜபக்‌ஷக்களுக்கு என ஒரு வரலாறு உண்டு. யுத்தத்தை முடித்து வைத்தவர்கள், புலிகளைத் தோற்கடித்தவர்கள் என சிங்களவர்களானால் தேசிய வீரர்களாகப் போற்றிப் புகழப்பட்டவர்கள். நாட்டில்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், கோட்டபாய ராஜபக்‌ஷ அரசின் சில தவறான நடவடிக்கைகளினால் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தாலும் ராஜபக்‌ஷக்கள் அனுரகுமார அரசினால் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுவார்களாக இருந்தால் ராஜபக்‌ஷக்களின் கெளரவம் சீரழிக்கப்படுமானால், அது ராஜபக்‌ஷ அரசு மீதான மக்களின் வெறுப்பாக மாறி ராஜபக்‌ஷக்கள் மீதான அனுதாப  அலையாக வீசினாலும் ஆச்சரியப்பட முடியாது. ஏனெனில், ‘மாற்றம்’
ஒன்றே மாறாதது.

நன்றி virakesari

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்