செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
![செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி](ptmin/uploads/news/India_rathna_senthil-balaji-electrical-minister.jpeg)
12 மாசி 2025 புதன் 12:51 | பார்வைகள் : 313
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்பது குறித்து பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமினை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வருவதால், விசாரணை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுதாரர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கு முன்பாக, வழக்கு தொடர்பாக வந்த தடயவியல் நிபுணர் தற்போது வரவில்லை. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் தான் பயத்தில் வர மறுக்கிறார். எனவே செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம்,' என அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள் ,'செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க ஏன் இவ்வளவு அவசரம். 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும் போது, அவர் அமைச்சராக தொடர்ந்தால் என்ன நடக்கும்?
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா ? என்பதை அவரது தரப்படும் கேட்டுச் சொல்லுங்கள். அப்படி அமைச்சராக தொடர விரும்பினால், முன்னுரிமை கொடுத்து விசாரிக்கலாம்,' என தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
![](/images/engadapodiyalxy.jpg)