Paristamil Navigation Paristamil advert login

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் வரை இருப்பேன்: அண்ணாமலை

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் வரை இருப்பேன்: அண்ணாமலை

13 மாசி 2025 வியாழன் 03:15 | பார்வைகள் : 284


அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் வரை இங்கு தான் இருப்பேன் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் திருவான்மியூரில் ஆரம்பித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும் இது போன்ற கூட்டம் நடத்தப்படும். அரிட்டாபட்டியில் முதல்வருக்கு பாராட்டு விழா. அவருக்கும், அந்த டங்ஸ்டன் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரே அவருக்கு பாராட்டு விழா நடத்தி, அரிட்டாபட்டிக்கு 96 அரசு பஸ்களில் ஒருத்தருக்கு ரூ.300 கொடுத்து உட்கார வைத்திருக்காங்க. இதில் பா.ஜ., கூட்டம் மட்டும் வித்தியாசம் இருக்கும். நம்முடைய தொண்டர்கள், நாட்டின் மீதும், மாநிலத்தின் மீதும் இருக்கும் பற்றோடு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பு தமிழிசை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், மிகப்பெரிய மாநிலத்தில் கவர்னராக இருந்திருப்பார். ஆனால், இங்கு தொண்டர்களோடு தொண்டனாக இருக்கவே அவர் விரும்பியுள்ளார். ஒருநாள் தமிழிசையும் பெரிய பொறுப்பில் இருப்பார்.

பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக் கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் சென்றாரோ, அப்பவே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என்பது தெரிய வந்துள்ளது.

உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி தான் மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மரியாதை இருக்கும் தலைவர் பிரதமர் மோடி. 2014ல் 3.45 கோடி பேர் வரி செலுத்தினார்கள். 10 ஆண்டுகள் கழித்து 7.90 கோடி பேர் வரி செலுத்துகின்றனர். 4.45 கோடி பேர் வரி செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். 7.90 கோடி பேரில் 6.80 கோடி பேர் ரூ.12 லட்சத்திற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்கள். அவர்கள் இந்த ஆண்டு வரி செலுத்த தேவையில்லை. இதன்மூலம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைவார்கள்.

2004 ஆண்டு முதல் 2014 ஆண்டு வரையிலான பட்ஜெட்டில் 5 முறை தமிழகம் பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம் ரூ.8,054 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு ரூ.1,68,585 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது, முதல்வர் அவர்களே.

2013-14ம் ஆண்டு காங்கிரஸின் கடைசி பட்ஜெட், 15 லட்சம் கோடி பட்ஜெட் தான். கடந்த 10 ஆண்டுகளில் 50 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது வளர்ச்சி இல்லையா? காங்கிரஸ் ஆட்சியில் இந்தியனின் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.86,000. தற்போது பா.ஜ., ஆட்சியில் ரூ.2,20,000 ஆகும். இது வளர்ச்சி இல்லையா?

கடந்த காங்கிரசின் ஆட்சியின் கடைசி பட்ஜெட்டில் மாநில நிதிப்பகிர்வு ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு, மாநில நிதிப்பகிர்வு, ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் கோடி. 5 மடங்கு அதிகரித்துள்ளது. முதல்வர் எதற்காக பொய் பேசுகிறீர்கள். இது முதல்வர் பதவிக்கு அழகா?

வட்டிக்கடை நடத்துகிறீர்கள் என்று முதல்வர் கேட்கிறார்? கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதிப்பகிர்வு கொடுக்கப்பட்டிருப்பது வட்டியா? ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது வட்டியா? விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவது வட்டியா? உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, மாநில அரசுக்கு உதவுவதற்காக, வட்டியில்லாத கடனை கொடுப்பதை விமர்சிக்கிறார்கள். பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள்.

பார்லிமென்டில் தொகுதி பிரச்னைகளை பேச சொன்னால், சம்பந்தமில்லாத கேள்விகளை தி.மு.க., எம்.பி.,க்கள் கேட்டு வருகின்றனர்.

கவர்னரும், அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.

பா.ஜ., தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன்; ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026ல் சிறைக்கு செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்