Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க.,விவகாரம்: தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்

அ.தி.மு.க.,விவகாரம்: தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்

13 மாசி 2025 வியாழன் 03:19 | பார்வைகள் : 654


அ.தி.மு,.க., உட்கட்சி விவகாரம் குறித்து, தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும் என்ற மனுவுக்கு எதிரான, அக்கட்சி பொதுச்செயலர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் தீர்வு காணும் வரை, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது; பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது' என, தேர்தல் கமிஷனிடம், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள் கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் புகார் மனுக்கள் அளித்தனர்.

விசாரணை ரத்து


இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. அதற்கு தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

அதில், 'கட்சியின் பதவி, சின்னம் உள்ளிட்டவை தொடர்பாக, சிவில் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் கமிஷன், நீதித் துறைக்கு இணையான விசாரணையை நடத்துகிறது.

'கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அளித்த புகார்கள் குறித்து பதில் அளிக்குமாறு, கடந்தாண்டு டிசம்பர் 24ல் தேர்தல் கமிஷன் செயலர், எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு தடை விதிப்பதுடன், விசாரணையை ரத்தும் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்க இடைக்கால தடை விதித்து, கடந்த மாதம் 9ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக் கோரி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், எம்.ஜி.ராமச்சந்திரன், வா.புகழேந்தி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் மீது விரிவான விசாரணை நடந்தது. அப்போது, ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் தரப்பில், 'தனிப்பட்ட அதிகாரம் கொண்ட தேர்தல் கமிஷனின் விசாரணைக்கு தடை கோர முடியாது' என வாதிடப்பட்டது.

அதிகாரம் இல்லை

பழனிசாமி தரப்பில், 'கட்சி விதிகளில் திருத்தம், புதிய தலைமை தேர்வு உள்ளிட்ட கட்சி விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தலையிட அதிகாரம் இல்லை. இது தொடர்பாக உரிமையியல் வழக்குகள் உள்ள நிலையில், இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த முடியாது' என, வாதிடப்பட்டது.

தேர்தல் கமிஷன் தரப்பில், 'சுதந்திரமான அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனுக்கு, நீதித்துறை அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட புகார்கள் குறித்து பதிலளிக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்ததன் வாயிலாக, அது எந்த அதிகார வரம்பு மீறலிலும் ஈடுபடவில்லை' என, பதில் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீதான உத்தரவை தள்ளிவைத்து, கடந்த 7ம் தேதி உத்தரவிட்டனர்.

அதன்படி, இந்த மனுக்கள் மீதான உத்தரவை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்தது.

'சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்தல் கமிஷன் விசாரணையை தொடரலாம். புகார் மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பின், தேர்தல் கமிஷன் விசாரணையை துவக்கலாம்.

'தேர்தல் கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது' என உத்தரவிட்ட நீதிபதிகள், பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது!

நீதிமன்றத்திற்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறதோ, அதே அதிகாரங்கள் தேர்தல் கமிஷனுக்கும் உண்டு என, அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பை வரவேற்கிறேன்; மகிழ்ச்சி அளிக்கிறது. பழனிசாமி போட்ட மனு, உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்பதோடு, 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும்' என நிரூபிக்கப்பட்டுள்ளது. - பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்