2005 பிரெஞ்சு கலவரம்! - தொடர்ச்சி!!
13 கார்த்திகை 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 18340
இளைஞர்கள் மின்சார வழங்கிக்குள் பதுங்கிக்கொள்ள ஓடியதும், அவர்களை மின்சாரம் தாக்கியதும் திட்டமிட்டதல்ல. அது எதேச்சையாக இடம்பெற்றது. ஆனால் இந்த சம்பவம் பின்னர் மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்த ஒரு பொறியாக இருந்தது.
'காவல்துறையினரின் அராஜகம் ஒழிக!' என்ற சினிமா வசனத்தை தான் அவர்கள் பயன்படுத்தினாலும், அவர்கள் தேர்ந்தெடுத்த வழி 'கலவரம்'. சம்பவம் இடம்பெற்ற இரு தினங்களில் பரிசின் புறநகர் பகுதியில் இரவு ஒரு கலவரம் இடம்பெற்றது. மகிழுந்துகளை அடித்து நொருக்கி, வீதிகளில் உள்ள பொருட்களை உடைத்து நொருக்கினார்கள். பின்னர் அது மறுநாளும் தொடர்ந்தது.
சம்பவம் இடம்பெற்ற ஆத்திரத்தில் இளைஞர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என காவல்துறையினர் பொறுமை காத்தனர். ஆனால் நிலமை தறிகெட்டு சென்றது... இந்த கலவரம் மெல்ல மெல்ல இல்-து-பிரான்ஸ் முழுக்க பரவியது. இரவில் வெளியே வரும் கலவரக்காரர்கள் வீதியில் இருக்கும் மகிழுந்துகளை அடித்து நொருக்குவதும், கடைகளின் கண்ணாடிகளை உடைப்பதும் என நகரையே வெறிப்பிடித்து சூறையாடினர்.
நவம்பர் 3 ஆம் திகதி, இது இல்-து-பிரான்சை தாண்டி.. பிரான்சில் பல்வேறு நகரங்களுக்கு பரவியது. காவல்துறையினருக்கு மிகப்பெரும் தலைவலியாய் போனது. அடுத்த ஐந்து நாட்களுக்குள் பிரான்ஸ் முழுவதும் கலவரம் பிரளயமாக வெடித்தது. மொத்தமாக 2900 கலவரக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆனால் கலவரம் தான் அடங்கவில்லை. நவம்பர் 8 ஆம் திகதி ஜனாதிபதி Jacques Chirac, அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறார்.
மறுநாள் இடம்பெற்ற கலவரத்தில் நபர் ஒருவர் கொல்லப்படுகிறார்.. நவம்பர் 10 ஆம் திகதி Belfort இல் உள்ள பாடசாலை ஒன்று எரியூட்டப்பட்டது. Toulouse, Lille, Strasbourg, Marseille, மற்றும் Lyon ஆகிய நகரங்கள் கலவர பூமியாக மாறியிருந்தன.
வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் அது. கிட்டத்தட்ட 25,000 கலவரக்காரர்கள் களமிறங்கியிருந்தனர்.
நாளை!!