Paristamil Navigation Paristamil advert login

உக்ரேன் போர் முடிவுக்கு கொண்டுவர புட்டினுடன் ட்ரம்ப் உரையாடல்...!

உக்ரேன் போர் முடிவுக்கு கொண்டுவர புட்டினுடன் ட்ரம்ப் உரையாடல்...!

13 மாசி 2025 வியாழன் 05:55 | பார்வைகள் : 882


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (12) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நீண்ட நேர மற்றும் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்த அழைப்பின் பின்னர், உக்ரேனுடனான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் “உடனடியாக” பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு தனது தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் மற்றும் புட்டின் இடையேயான அழைப்பு, ஜனாதிபதி இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பின்னர் இருவருக்குமிடையில் அறியப்பட்ட முதல் உரையாடலாகும்.

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து அமெரிக்காவால் தவறாகக் காவலில் வைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட பென்சில்வேனியா பாடசாலை ஆசிரியர் மார்க் ஃபோகலை ரஷ்யா விடுவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த முன்னேற்றம் வந்துள்ளது.

தொலைபேசி அழைப்பு குறித்து சமூக ஊடகத்தளமான Truth Social இல் பதிவொன்றை இட்ட ட்ரம்ப், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நான் நீண்ட மற்றும் மிகவும் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.

இந்த அழைப்பில் நாங்கள் உக்ரேன், மத்திய கிழக்கு, ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, டொலரின் சக்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தோம்.

உக்ரேனுடனான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசியத்தை ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

போரைப் பற்றிய விவாதங்களைத் தொடங்குவதற்கான உறுதிமொழிக்கு மேலதிகமாக, ஜனாதிபதியும் அவரது ரஷ்யப் பிரதிநிதியும் “ஒருவருக்கொருவர் தேசத்திற்கு” விஜயம் செய்வதாகக் கூறினர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரை போர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு பணித்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.

புதன்கிழமை பிற்பகுதியில் ஓவல் அலுவலகத்திலிருந்து பேசிய ட்ரம்ப், புட்டினுடனான தொலைபேசி அழைப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது, மேலும் இரு தலைவர்களும் சவுதி அரேபியாவில் தனது புதிய பதவிக்காலத்தின் முதல் அமர்விற்காக சந்திப்பார்கள் என்று கூறினார்.

புட்டின் “அமைதியை விரும்புகிறார்” என்றும் “அது முடிவுக்கு வர வேண்டும்” என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

புட்டினுடனான உரையாடலுக்கு மேலதிகமாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் ட்ரம்ப் புதன்கிழமை தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார்.
மேலும், இந்த உரையாடல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக ஜெலென்ஸ்கியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள உக்ரேன் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதியுடன் அர்த்தமுள்ள உரையாடலை நடத்தினேன். நாங்கள் அமைதியை அடைவதற்கான வாய்ப்புகள் பற்றிப் பேசினோம், ஒன்றாக வேலை செய்வதற்கான எங்கள் தயார்நிலை பற்றி விவாதித்தோம் மற்றும் உக்ரேனின் தொழில்நுட்பத் திறன்கள், ட்ரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட தொழில்கள் குறித்து விவாதித்ததாக கூறினார்.

2022 பெப்ரவரியில் ரஷ்யா உக்ரேனின் முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடங்கியது.

உக்ரேன் மோதலின் ஆரம்ப மாதங்களுக்குப் பின்னர் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை, இப்போது அதன் மூன்றாவது ஆண்டு நிறைவை நெருங்குகிறது.

ட்ரம்பின் முன்னோடியான ஜோ பைடன், கியேவுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள், இராணுவ மற்றும் பிற உதவிகள் வழங்குவதை மேற்பார்வையிட்டார்.

மேலும், ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் புட்டினுடன் நேரடி தொடர்பு கொள்ளவில்லை. ரஷ்யா உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

மேலும், எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தின் கீழும் கியேவ் கூடுதல் பிரதேசத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் நிரந்தரமாக நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

கைப்பற்றப்பட்ட பிரதேசத்திலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று உக்ரேன் கோருகிறது, மேலும் மொஸ்கோ மீண்டும் தாக்குவதைத் தடுக்க நேட்டோ உறுப்பினர் அல்லது அதற்கு சமமான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெற வேண்டும் என்று கூறுகிறது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய சக்திகள் புதன்கிழமை உக்ரேனின் தலைவிதி குறித்த எந்தவொரு எதிர்கால பேச்சுவார்த்தையிலும் பங்கேற்க வேண்டும் என்று கூறியது.

பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் நியாயமான ஒப்பந்தம் மட்டுமே நீடித்த அமைதியை உறுதி செய்யும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.

உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், அதை வலிமையான நிலையில் வைக்கவும் அவர்கள் தயாராக இருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்த நிலையில், நேட்டோ இராணுவக் கூட்டணியில் இணைவது மற்றும் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட அதன் அனைத்துப் பகுதிகளையும் மீண்டும் கைப்பற்றுவது என்ற நீண்டகால இலக்குகளை கியேவ் கைவிட வேண்டும் என்று ட்ரம்பின் பாதுகாப்புச் செயலாளர் முன்னதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த உரையாடல்கள் வந்தன.

இது மோதலுக்கான வொஷிங்டனின் அணுகுமுறையில் ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கிறது.

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்