மக்களை சுரண்டிய ஆம்ஆத்மி; பொறுப்பு முதல்வர் அதிஷிக்கு பா.ஜ., பதிலடி

14 மாசி 2025 வெள்ளி 03:02 | பார்வைகள் : 437
டில்லியின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதாக ஆம்ஆத்மி குற்றச்சாட்டுக்கு, பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மியை தோற்கடித்து 27 ஆண்டுகள் கழித்து பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ., சார்பில் முதல்வரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனிடையே, புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள பா.ஜ., அரசு மீது முன்னாள் முதல்வர் அதிஷி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு டில்லியில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறுகையில், 'ஆம்ஆத்மி ஆட்சியின் போது மின்வாரியத்துறை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது, பா.ஜ., ஆட்சிக்கு வந்த 3 நாட்களில் நிலைமை மாறி விட்டது. பா.ஜ.,வுக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை. உத்தரபிரதேசத்தைப் போல டில்லியிலும் நீண்ட நேர மின்வெட்டு நிலைமை உருவாக்குகின்றனர்,' எனக் கூறினார்.
ஆம்ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பா.ஜ., மாநில தலைவர் விரேந்திர சச்தேவா, 'டில்லியில் மின்வெட்டு ஏதுமில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஆதிஷி சுமத்தி வருகிறார். பல ஆண்டுகளாக தனியார் மின்விநியோக நிறுவனங்களுடன் இணைந்து ஆம்ஆத்மிஅரசு மக்களிடம் இருந்து சுரண்டியது டில்லி மக்களுக்கே நன்கு தெரியும். தற்போது, பா.ஜ., அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. இதனால், தற்போது பொறுப்பு முதல்வராக இருக்கும் அதிஷி அச்சத்தில் இதுபோன்ற கருத்துக்களை கூறுகிறார்,' என்றார்.