Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க., உள்கட்சி விவகார வழக்கில் மீண்டும் சிக்கல்

அ.தி.மு.க., உள்கட்சி விவகார வழக்கில் மீண்டும் சிக்கல்

14 மாசி 2025 வெள்ளி 03:05 | பார்வைகள் : 546


அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல், எந்த முடிவும் எடுக்கக்கூடாது எனக் கோரி, பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில் மீண்டும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது; தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்தது.

அதிகாரம் இல்லை


தீர்ப்புக்குப் பின் பேட்டியளித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 'உள்கட்சி விவகாரங்களை விசாரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.

'கட்சியின் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் செய்து, அதன் விபரங்களை தெரிவித்தால். அதை அப்படியே ஏற்கும் குமாஸ்தா பணி தான் தேர்தல் ஆணையத்தின் வேலை' என, கூறியிருந்தார்.

இச்சூழலில், பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இரட்டை இலை சின்னம் குறித்தும், தேர்தல் ஆணையம் விசாரிக்க இருப்பது சிக்கலை ஏற்படுத்தலாம்; இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்ற அச்சம், அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பன்னீர் செல்வம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில், 'அ.தி.மு.க., உள்கட்சி விவகாரம் தொடர்பான, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, யாரேனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், எங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பின்னரே, எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், 2022 ஜூனில் பழனிசாமி -- பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது.

பிரச்னை தீரவில்லை


இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரம், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

அதில், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், பழனிசாமி பொதுச்செயலராக தேர்வான பின்னும் பிரச்னை தீரவில்லை.

இந்நிலையில், உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க, உயர் நீதிமன்றத்தால் அனுமதி தரப்பட்டுள்ளது.

அதற்கு உச்ச நீதிமன்றம் சென்று, பழனிசாமி தடையுத்தரவு பெற்று விடக்கூடாது என்பதால், பன்னீர்செல்வம் முந்திக் கொண்டு உள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்