நடிகர் விஜய்க்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு; மத்திய அரசு புது முடிவு

14 மாசி 2025 வெள்ளி 03:07 | பார்வைகள் : 1083
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு நடத்தும். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் புதிதாக யாருக்கேனும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமா என்பது பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும்.
பாதுகாப்பு படையில் இருக்கும் வீரர்கள் எண்ணிக்கை, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பானது,இசட், இசட் பிளஸ், ஒய் என வெவ்வேறு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் அரசியலில் இறங்கி உள்ள நடிகர் விஜய்க்கும் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
'Y' பிரிவில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இதன்படி அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இந்த பாதுகாப்பானது, தமிழகத்துக்குள் அவர் எங்கு சென்றாலும் தொடர்ச்சியாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.