கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கும் குறித்து அறிக்கை

14 மாசி 2025 வெள்ளி 08:38 | பார்வைகள் : 1068
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மீது 25 சதவிகித கூடுதல் வரிகள் விதிப்பது மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்குவது குறித்து அறிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில், புதன்கிழமையன்று, கனடாவின் 13 மாகாண பிரீமியர்களும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்தித்து இந்த விடயம் குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த முரண்பட்ட தகவல்களை இருதரப்பினரும் வெளியிட்டுள்ளனர்.
அதாவது, கனடா தரப்பில் வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்தித்தவர்களில் ஒருவரான பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியரான டேவிட் எபி, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவரும் கருத்துக்கள் குறித்து தாங்கள் கவலை தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த ட்ரம்பின் கருத்து குறித்து வெளிப்படையாக தாங்கள் பேசியதாகவும், அது நடக்காது என்பதை தாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் டேவிட் எபி தெரிவித்துள்ளார்.
ஆனால், கனேடிய பிரீமியர்களை சந்தித்த வெள்ளை மாளிகை அதிகாரிகளில் ஒருவரான ஜேம்ஸ் பிளேர் என்பவரோ, கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆகாது என்பதை தான் ஒப்புக்கொள்ளவே இல்லை என்று கூறியுள்ளார்.
பிரீமியர் டேவிட் எபியின் கருத்துக்களை ட்ரம்புடன் பகிர்ந்துகொள்வதாக மட்டுமே நாங்கள் தெரிவித்தோம் என்றும் ஜேம்ஸ் பிளேர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆக, கனடாவில் 13 பிரீமியர்கள் சென்று வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்தித்தும், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது.