Paristamil Navigation Paristamil advert login

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

14 மாசி 2025 வெள்ளி 11:00 | பார்வைகள் : 421


தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபாய் சொந்த பிணையில் விடுவித்த நீதவான் வழக்கை ஜூன் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் சட்டத்தரணி மகிந்தன் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக பலாலி பொலிஸார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது குற்றஞ்சாட்டி வழக்கு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் பரப்பபட்ட நிலையில் அது போலியானது என தெரிவித்து ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியதுடன் தனது சமூக வலைத்தளத்திலும் போலிச் செய்தி என குறிப்பிட்டு பகிர்ந்து இருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்