தனுஷ் படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறாரா அனிருத்?

14 மாசி 2025 வெள்ளி 14:23 | பார்வைகள் : 629
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான அனிருத், தற்போது ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கும் அவர்தான் இசையமைக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளர் அனிருத், ’கிங்க்டம்’, ’இந்தியன் 3’ ’கூலி’, ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ’சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் திரைப்படம், ’ஜனநாயகன்’ ஆகிய தமிழ் படங்களிலும், சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் இசையமைத்து வருகிறார். இந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் தனுஷ் நடிப்பில், ’லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனுஷ் மற்றும் அனிருத் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் இணைந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் அனிருத் இணைந்தால், அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மை. அதேபோல், இந்த படமும் மீண்டும் அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!