சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்குத் திரும்பலாம்: நாசா தகவல்

14 மாசி 2025 வெள்ளி 15:46 | பார்வைகள் : 556
விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே பூமிக்குத் திரும்பலாம் என நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸும், அவரது சக வீரரான பட்ச் வில்மோரும் எட்டு மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கிக்கொண்டுள்ளார்கள்.
அவர்கள் விண்வெளிக்குச் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் என்னும் விண்கலத்தில் பழுது ஏற்பட்டதால் அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்ப முடியாமல் போய்விட்டது.
ஆகவே, சுனிதாவும் வில்மோரும் இந்த மாதம், அதாவது, மார்ச் மாதக் கடைசி அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் பூமிக்குத் திரும்பக்கூடும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், எதிர்பார்த்ததைவிட விரைவாக, இம்மாதத்தின் நடுவிலேயே அவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்பலாம் என தற்போது நாசா தெரிவித்துள்ளது.
அவர்கள், SpaceX நிறுவனத்தின், Crew Dragon கேப்சூல் என்னும் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப இருக்கிறார்கள்.