Paristamil Navigation Paristamil advert login

ராணுவத்திற்காக மோடி- டிரம்ப் இடையே ஒப்பந்தம்

ராணுவத்திற்காக மோடி- டிரம்ப் இடையே ஒப்பந்தம்

15 மாசி 2025 சனி 05:04 | பார்வைகள் : 534


அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்தார். அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 41.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பரஸ்பர வரி விதிப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேச்சு நடத்தினர்.

பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இரண்டாவது முறை அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்பை, வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார்.

 நீண்டகால நண்பர்


இந்த சந்திப்புக்கு சில மணி நேரங்கள் முன் தான், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு கொள்கை முடிவை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் அவர்களுக்கு விதிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், மோடி - டிரம்ப் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் டிரம்ப், ''மோடி என் நீண்ட கால நண்பர்; திறமையான தலைவர். இந்தியாவின் வளர்ச்சியில் அவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,'' என, பாராட்டினார்.

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்திய பின், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை வழங்குவதில் முதலிடம் வகிக்கும் நாடாக அமெரிக்காவை மாற்றக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை நானும், பிரதமர் மோடியும் எட்டியுள்ளோம்.

இந்தியா உடனான அமெரிக்க வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. இதை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் அமையும்.

ஒட்டுமொத்த ராணுவ கூட்டாண்மையை விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு துவங்கி, இந்தியாவுக்கான ராணுவ தளவாட விற்பனையை பல நுாறு பில்லியன் டாலர்கள் அதிகரிக்க உள்ளோம்.

இந்தியாவுக்கான, 'எப்35' ரக போர் விமானங்களை விரைவில் வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.

உலகம் முழுதும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இணைந்து செயல்படும்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணாவை, லாஸ் ஏஞ்சலஸ் சிறையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தம்


அவர் விரைவில் இந்தியா சென்று, வழக்கை எதிர்கொள்வார். இது போல மேலும் சிலரை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களையும் விரைவில் அனுப்பி வைப்போம்.

அமெரிக்க அணுசக்தித் துறைக்கான புரட்சிகரமான வளர்ச்சியில், எங்கள் அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்திய சந்தைக்கு வரவேற்கும் வகையில் இந்தியா சட்டங்களை சீர்திருத்தம் செய்து வருகிறது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இறக்குமதி பொருட்களுக்கான பரஸ்பர வரிவிதிப்பு குறித்து டிரம்பிடம் கேட்டபோது, ''சில குறிப்பிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி மிக அதிகமாகவும், நியாயமற்றதாகவும் உள்ளது. எங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனரோ; அதையே இந்தியாவுக்கு நாங்கள் திரும்ப விதிப்போம்,'' என்றார்.

இறக்குமதி பொருட்களுக்கான பரஸ்பர வரிவிதிப்பு குறித்து டிரம்பிடம் கேட்டபோது, ''சில குறிப்பிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி மிக அதிகமாகவும், நியாயமற்றதாகவும் உள்ளது. எங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனரோ; அதையே இந்தியாவுக்கு நாங்கள் திரும்ப விதிப்போம்,'' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்