Paristamil Navigation Paristamil advert login

"ஸ்ரீலங்கா தாயே" - தேசிய கீதத்தை தமிழில் பாடுவதன் வரலாறு

15 மாசி 2025 சனி 11:47 | பார்வைகள் : 514


இலங்கை அதன் 77 வது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடியது.அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இடம்பெற்ற முதலாவது சுதந்திரதினக் கொண்டாட்டம் என்பதால் இந்த தடவை அதற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. சுதந்திரதின நிகழ்வை நடத்திய விதத்துக்காக ஜனாதிபதி திசாநாயக்கவுக்கும் அவரின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் பெரும் பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன.

77 வது சுதந்திர தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கண்ணியமாகவும் கௌரவமாகவும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. கடந்த காலத்தைப் போன்று பகட்டு ஆரவாரம் எதுவும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் அந்த கொண்டாட்டம் இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டில் படையினரின் அணிவகும்பில் 3,384 பேர்  பங்கேற்றனர். இந்த தடவை அந்த எண்ணிக்கை 40 சதவீதத்தினால்  குறைக்கப்பட்டு 1,873 படைவீரர்களே அணிவகுப்பில் பங்கேற்றனர். அதில் இராணுவ வாகனங்களைக் காணவில்லை. கடந்த வருடம் 19 விமானங்கள் பறந்த இடத்தில் இந்த தடவை வெறுமனே மூன்று விமானங்களே பறந்தன. மொத்தச் செலவினம் கடந்த வருடத்தைய மொத்த செலவினம் 20 கோடி ரூபாவில் இருந்து இவ்வருடம் 8 கோடி ரூபாவாக குறைக்கப்பட்டது.

இலங்கையின் தேசியகீதம் தமிழிலும் இசைக்கப்பட்டது என்னை மிகவும் கவர்ந்த முக்கிய அம்சமாகும். வைபவத்தின் தொடக்கத்தில் தேசிய கீதப் சிங்களத்தில் இசைக்கப்பட்டது. இறுதியில் அது தமிழில் இசைக்கப்பட்டது. "ஸ்ரீலங்கா தாயே" என்று தமிழில் இந்துக்கள்,  முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைக் கொண்ட அணி பாடுவதைக் கேட்டபோது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுமா என்று முன்னதாக எனக்கு சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இந்த ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கியத்துக்கும் (Unity) ஒருமித்த தன்மைக்கும் ( Uniformity) இடையேயான வேறுபாட்டைப் பற்றி குழப்பத்துக்கு உள்ளாகியிருந்தது. அமைச்சரவையில் இலங்கை தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் உள்ளடக்கப்படாதது தொடர்பான கேள்விக்கு இந்த அரசாங்கம் நொண்டிச் சாட்டுக்களை கூறியது. அதே போன்றே சுதந்திர தினத்தில் தமிழைப் புறந்தள்ளி விட்டு ' நாங்கள் எல்லோரும் இலங்கையர்களே ' கூறி அதை அரசாங்கம் நியாயப்படுத்தும் என்று நான் நினைத்தேன்.

அதனால் தேசிய கீதம்தமிழில் இசைக்கப்பட்டது குறித்து  நான் மகிழ்ச்சி அடைந்தேன். மகிந்தவினதும் கோடடாபயவினதும் ராஜபக்ச ஆட்சிகளில் அவ்வாறு அவ்வாறு நடைபெறவில்லை. இந்த நாட்டின் இரு உத்தியோகபூர்வ மற்றும் தேசிய மொழிகளில் தமிழும் ஒன்றே என்பதுடன் அது சனத்தொகையில்  சுமார் 25 சதவீதமானோரின் தாய்மொழியாகவும் இருக்கின்ற போதிலும், சுதந்திர தினத்தில் தேசிய கீதம  தமிழில் இசைக்கப்படுவதைக் கண்டும் கேட்டும் தமிழர்கள் மகிழ்ச்சியடைவது என்பது உண்மையில் வருத்தத்துக்குரிய ஒரு நிலைமையாகும். ஆனால், சின்னச்சின்ன தயவுகள் காண்பிக்கப்படும் போதெல்லாம் நன்றிகூற நிர்ப்பந்திக்கப்படுகின்ற அளவுக்கு தமிழர்கள் அவலநிலையில் இருக்கிறார்கள்.

ஆதனால் இத்தகைய ஒரு பின்புலத்தில் இலங்கையின்  தேசிய கீதத்தின் படிமுறை வளர்ச்சி மற்றும் சுதந்திரத்துக்கு பிறகு அது தமிழில் இசைக்கப்படுவதன் வரலாறு குறத்து இந்த கட்டுரை கவனம் செலுத்துகிறது. எனது முன்னைய சில கட்டுரைகளின் உதவியுடன் இதை எழுதுகிறேன்.

மன்னரை / மகாராணியை கடவுள் காப்பாராக

ஒரு தேசிய கீதம் என்பது நாட்டின் அல்லது தேசத்தின் மீதான விசுவாசத்தை உறுதி செய்யும் தேசபக்க உணர்வுடனான ( உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒரு கீதமாகும். ஒரு கீதம் அரசியலமைப்பு ஏற்பாடு, விசேட சட்டம் அல்லது நீண்டகால பாரம்பரியம் மூலமாக தேசிய கீதமாக மாறுகிறது. தேசிய கீதக் கோட்பாடு ஒன்று இலங்கைக்கு பிரிடடிஷ் ஆட்சியாளர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

" மன்னரை / மகாராணியை கடவுள் காப்பாற்றுவார்" என்பது 1745 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தேசியகீதமாக வந்தது. அது பயன்பாடு மற்றும் வழக்கத்தின் ஊடாகவே அன்றி சட்டரீதியான  ஆணையின் மூலமாக வரவில்லை. பிரிட்டிஷ் சாம்ராச்சியம் படிப்படியாக விரிவடைந்த நிலையில் " மன்னரை / மகாராணியை கடவுள் காப்பாற்றுவார் " என்பது பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்த சகல நாடுகளிலும் பிராந்தியங்களிலும் தேசிய கீதமாக பாடப்பட்டது. இலங்கை அதற்கு விதிவிலக்கானதாக இருக்கவில்லை. விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் கீழ் "  கடவுள் மகாராணியை காப்பாற்றுவார்" என்பது இலங்கைக்கான தேசியகீதமாகவும்  நடைமுறைக்கு வந்தது. இது இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி ஊடாகத் தொடர்ந்தது." கடவுள் மன்னரை காப்பாற்றுவா்" என்பது ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் ஆட்சியின் கீழ் இலங்கையின் தேசிய கீதமாக இருந்தது. அவரின் ஆட்சியில் தான் இலங்கை சுதந்திரத்தை அடைந்தது.

காந்தர்வ சபா போட்டி

இலங்கை முழுமையான சுதந்திரத்தைப் பெறவிருந்தபோது அங்கீகரிக்கப்ட்ட சுதேசிய  தேசிய கீதம் ஒன்று இருக்கவில்லை. தேசிய கீதம் ஒன்றை  இயற்றும் பணி லங்கா காந்தர்வ சபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு பொருத்தமான கீதத்தை தெரிவு செய்யும் கடமை சபாவினால் அமைக்கப்பட்ட குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழுவில் எஸ.எல்.பி. கப்புக்கொட்டுவ, கலாநிதி ஓ.எச்.டி. விஜேசேகர, லயனல் எதிரிசிங்க, முதலியார் ஈ.ஏ. அபேசேகர, எல்.எல்.கே. குணதுங்க, பிபி. இலங்கசிங்க  ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

சர்ச்சைக்குரிய ஒரு தீர்மானமாக அந்த குழுவின் உறுப்பினர்களில் இருவர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இலங்கசிங்கவினால் இயற்றப்பட்டு லயனல் எதிரிசிங்கவினால் இசையமைக்கப்பட்ட ஒரு பாடல் தேசிய கீதமாக இருக்கும் என்று அறிவிககப்பட்டது." ஸ்ரீலங்கா மாதா்/ பல யச மாஹிமா/ஜய ஜய " என்று தொடங்கிய அந்த கீதம் "ஜய ஜய தட நங்க/ ஸ்ரீலங்கா மாதா " என்று முடிவடைந்தது.

தெரிவுக்குழுவில் இருந்த இரு உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பாடல் தேசியகீதப் போட்டியில் ' வெற்றி ' பெற்றதனால் பரந்தளவில் எதிர்ப்பு கிளம்பியது. அந்த தெரிவு அப்பட்டமாக நேர்மையற்றதாக நோக்கப்பட்டது. பாடல் குறைபாடுகள் இல்லாததாகவும் பழிச்சொல்லுக்கு  அப்பாற்பட்டதாகவும் இருந்த அதேவேளை அதை தேசிய கீதமாக ஏற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சலுகை காட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்ற எண்ணமே விமர்சனத்தையும் எதிர்ப்பையும் கிளம்ப வைத்தது. அதனால் தேசியகீதப் போட்டியில் வெற்றிபெற்ற பாடல் மக்களைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்ள முடியாததாகி நம்பகத்தன்மையை இழக்கத் தொடங்கியது.

கவிஞர் ஆனந்த சமரக்கோன்

அதேவேளை,  இன்னொரு பாடல் ஒரு  தேசியகீதமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொண்டதாக மக்கள் மத்தியில் படிப்படியாக கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. பிரபலமான கவிஞரான ஆனந்த சமரக்கோன் எழுதிய " நமோ நமோ மாதா" என்ற பாடலே அதுவாகும்.

தேசிய கீதம் ஒன்றை தெரிவு செய்வதற்கு காந்தரவ சபா போட்டியை நடத்தியபோது ஆனந்த சமரக்கோன் இந்தியாவில் இருந்தார். ஆனால், அவரின் மனைவியும் சகோதரரும்  " நமோ நமோ மாதா " பாடலை அந்த போட்டிக்கு சமர்ப்பித்திருந்தனர். முழுமையாக தகுதிகொண்டதாக இருந்த போதிலும், அந்த பாடல் கவனித்துக்கு எடுக்கப்படாமல் இலங்கசிங்க -- எதிரிசிங்கவின் " ஸ்ரீலங்கா மாதா , யச மாஹிமா " பாடல் தெரிவு செய்யப்பட்டது.

"நமோ நமோ மாதா "

போட்டியில் ' வெற்றி ' பெற்றபோதிலும், "யச மாஹிமா " வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விதம் காரணமாக பெரும்பாலான மக்களினால் புறக்கணிககப்பட்டது. எந்தவொரு உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத போதிலும், "நமோ நமோ மாதா" மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது "யச மாஹிமா " வுக்கு மேலாக " நமோ நமோ மாதா" மக்களினால் விரும்பப்படுகின்ற அளவுக்கு அது சாதாரண மககள் மத்தியில் பிரபல்யமானதாக இருந்தது. உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாவிட்டாலும் கூட " உண்மையான "  ஒரு தேசியகீதமாக அது மாறியது.

பரந்தளவில் மக்களின் ஆதரவைப் பெற்ற " நமோ நமோ மாதா" வை உத்தியோகபூர்வ தேசியகீதமாக முறைப்படி  அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று 1950 ஆம் ஆண்டில் அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர். ஜெயவர்தன அமைச்சரவையில் ஒரு மகஜரை சமர்ப்பித்தார். அது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்க  உள்நாட்டு அலுவல்கள்,  கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சேர் ஈ.ஏ.பி. விஜேரத்ன தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தார்.

அந்த குழு " நமோ நமோ மாதா " வையும் அதன் ஏனைய சில வரிகளையும் பரிசீலித்து சமரக்கோனின் அந்த பாடலே தேசியகீதமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது. " நமோ நமோ மாதா" வை தேசியகீதமாக அங்கீகரிக்கும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சேர் விஜேரத்ன 1951 ஆகஸ்டில் சமர்ப்பித்தார். அமைச்சரவையினால் அது அங்கீகரிக்கப்பட்டு 1951 நவம்பர் 22 ஆம் திகதி முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அப்போது டி.எஸ். சேனநாயக்கவின் அமைச்சரவையில் இரு தமிழர்கள் அமைச்சர்களாக ( ஜீ.ஜீ. பொன்னம்பலமும் சி. சிற்றம்பலமும்) இருந்தனர். அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுப்பதற்கு முன்னதாகவே பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் டி.எஸ். சேனநாயக்க கூறிவிட்டார். தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் ஒன்று இருக்க வேண்டும் என்பதை சேர் விஜேரத்ன தலைமையிலான தெரிவுக்குழு கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது.

பண்டிதர் நல்லதம்பி

மொழிபெயர்ப்பைச் செய்யும் பணி கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஒரு ஆசிரியரான கல்விமான் பண்டிதர் எம். நல்லதம்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மொழிபெயர்ப்பை கச்சிதமாக செய்து முடித்தார். பயன்பாட்டுக்கு வந்த தேசியகீதத்தின் தமிழ் வடிவம் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உத்தியோகபூர்வ வைபவங்களில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டது.

இலங்கையின் தேசியகீதம் நாட்டுப்பற்றை போற்றிப் புகழ்ந்ததே அன்றி எந்தவொரு இனத்தை,  மதத்தை, சாகியத்தை அல்லது சமூகத்தை புகழவில்லை என்நு அதன் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். அது குறுகிய நோக்குடையதாகவோ அல்லது பக்கச்சார்பானதாகவோ இருக்கவில்லை. இலங்கை மாதாவின் சகல பிள்ளைகளினதும் நாட்டுப்பற்று உணர்வுகளுக்கு அது உத்வேகம் கொடுத்தது.

அதனால், தேசிய கீதத்தை நிராகரிப்பதற்கு  அல்லது எதிர்ப்பதற்கு தமிழ் மக்களுக்கு காரணம் இருக்கவில்லை . சிங்களச் சொற்களின் அர்த்தம் தெரியவந்ததும் அதில் ஆட்சேபிப்பதற்கு எதுவும் இல்லை என்பதை தமிழர்கள் கண்டுகொண்டனர். பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று இருந்ததால் தமிழர்கள் தமது தாய்மொழியில்  தேசியகீதத்தை உணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இசைத்தனர்.

1952 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்தியதின வைபவங்களில் உத்தியோகபூர்வ தேசியகீதமாக " நமோ நமோ மாதா " இசைக்கப்பட்டது. " நமோ நமோ தாயே" யாழ்ப்பாணம், வவுனியா,  மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கச்சேரிகளில் இடம்பெற்ற சுதந்திர தின வைபவங்களில் இசைக்கப்பட்டது. பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல 1954 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட வைபவக்களில் தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்பட்டது.

தேசியகீதம் அறிவிப்பு

" நமோ நமோ மாதா " தேசியகீதம் என்பதை அறிவிக்கும் பெரிய விளம்பரங்களை அரசாங்கம் சிங்கள, தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் 1952 மார்ச் 12 ஆம் திகதி வெளியிட்டது.  சிங்கள சொற்கள் சிங்களப் பத்திரிகைகளிலும் தமிழ்ச் சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்ட அதேவேளை,  ஆங்கிலப் பத்திரிகைகளில் சிங்களச் சொற்கள் ஆங்கில எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டது.

நமோ நமோ மாதா உத்தியோகபூர்வ தேசியகீதமாக இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், மெல்லிசையிலோ அல்லது இசைக்கப்பட்ட முறையிலோ ஒருமித்ததன்மை இருக்கவில்லை. வேறுபட்ட குழுக்களும் பாடகர்களும  வெவ்வேறு விதங்களில் இசைத்தார்கள். அது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால், தேசியகீதம் இசைக்கப்படுகின்ற முறையில் ஒருமித்த தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு குழுவை நியமிப்பதற்கு தீர்மானித்தது.

பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றுை1953 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டது. ஆனந்த சமரக்கோன், டெவர் சூரியசேன மற்றும் ஜே டி.ஏ. பெரேரா ஆகியோரும்  அதன் உறுப்பினர்கள். தேசியகீதம் எவ்வாறு பாடப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழிகாட்டல்களை வகுத்த அந்த குழு  திட்டவட்டமான தொனியையும் வரையறுத்தது. அதற்கான மெல்லிசையும் சமரக்கோன் ஆரம்பத்தில் அமைத்த தொனியின் வடிவில் வரையறுக்கப்பட்டது.

பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் அமைச்சரவை 1954 ஜூன் 24 ஆம் திகதி  தேசியகீதத்தின் தொனியையும் இசைக்கும் முறையையும்  முறைப்படி ஏற்றுக்கொண்டது. எச்.எம்.வீ. இசைத்தட்டுகளின் முகவர்களாக அன்று விளங்கிய பிரபல்யமான கார்கில்ஸ்  நிறுவனத்திடம் தேசியகீத இசைத்தட்டுக்களை செய்வதற்கான பணி உத்தரவு கொடுக்கப்பட்டது.

தேசிய கீதத்தின் தமிழ் வடிவத்துக்காகவும் ஒரு தட்டு உருவாக்கப்பட்டது.  இசை  சமரக்கோன் அமைத்த அதே முறையில்  அமைந்த அதேவேளை, சங்கரி, மீனா என்ற இரு பெண்மணிகள் பண்டிதர் நல்லதம்பியினால் எழுதப்பட்ட தமிழ் வடிவத்தை பாடினார்கள்.தமிழ் வடிவம் முதன் முதலாக " இலங்கை வானொலியில் 1955 பெப்ரவரி 4 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒலிபரப்பானது.

தீய நோக்குடன் பிரசாரம்

அதேவேளை, " நமோ நமோ மாதா" வுக்கு எதிராக  மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட தீயநோக்குடனான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய கீதத்தின் தொடக்க வரிகளே  நாடு எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் என்று கூறப்பட்டது. அந்த பிரசாரத்தை திருமதி  சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி அரசாங்கம் கரிசனையுடன் நோக்கியது. அதை ஆராய்ந்து நாட்டின் பிரச்சினைகளுக்கு தேசியகீதம் காரணமா என்பதை தீர்மானிப்பதற்கு அன்றைய உள்நாட்டு அலுவல்கள், கலாசார அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்க " நிபுணர்கள் " குழுவொன்றை நியமித்தார்.

நமோ நமோ மாதா என்ற சொற்களை " ஸ்ரீலங்கா மாதா " என்று மாற்றியமைக்க வேண்டும் என்று அந்த குழு சிபாரிசு செய்தது. அதை கடுமையாக ஆட்சேபித்த ஆனந்த சமரக்கோன் உத்தேச மாற்றத்தை எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் அதைப் பொருட்படுத்தாமல்  நமோ நமோ மாதாவை ஸ்ரீலங்கா மாதாவாக ஒருதலைப்பட்சமாக 1961 பெப்ரவரியில் மாற்றியது.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று சிங்களத்தில் தேசியகீதமும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் 1951 ஆம் ஆண்டில் பிரதமர் டி.எஸ். னேநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் முறைப்படி  ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிங்களத்திலும் தமிழிலும் அதன்  மெல்லிசை மற்றும்  பாடுகின்றமுறையின்  ஒருமித்ததன்மை பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் 1954 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக வரையறுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிங்களம் மாத்திரம் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவில்லை.

சிங்களம் மாத்திரம் உத்தியோகபூர்வ மொழி

எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததை அடுத்து 1956 ஆம் ஆண்டில் நிலைவரம் மாறியது. பண்டாரநாயக்க பிரதமராக வந்தவுடன் சிங்களத்தை மாத்திரம் உத்தியோகபூர்வ மொழியாக்கினார். சிங்களம் மாத்திரம் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்ட பின்னரும் கூட தேசியகீதத்தின் தமிழ் வடிவம் தொடர்ந்தும் பயன்பாட்டில் இருந்து வந்தது என்பது உண்மையில் கவனிக்கத்தக்கது.

கொழும்பிலும் சிங்களவர்களை பெரும்பானமையாகக் கொண்ட மாகாணங்களிலும் பெரும்பாலான உத்தியோகபூர்வ வைபவங்களில் தேசியகீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்ட அதேவேளை, தமிழ்ப் பகுதிகளிலும் தமிழ்மொழிமூலப் பாடசாலைகளிலும் அதன் தமிழ் வடிவம் இசைக்கப்பட்டது. சிங்களம் மாத்திரமே உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டு, தமிழுக்கு உத்தியோகபூர்வமான எந்த அந்தஸ்தும் இல்லாத நிலையிலும் கூட அவ்வாறான ஒரு விட்டுக்கொடுப்பு மனோபாவம் வெளிக்காட்டப்பட்டது.

தேசியகீதத்தின் சிங்கள வடிவமும் தமிழ் வடிவமும் பல தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வந்தன. தேசியகீதத்தின் பயன்பாட்டின் குறிப்பிட்ட வடிவம் பல வருடங்களாக நடைமுறையில் இருந்தது. மூலமுதல் சிங்கள வடிவத்துக்கு பெரும்பாலான அரச மற்றும் உத்தியோகபூர்வ வைபவங்களிலும் நிகழ்வுகளிலும் பெருமைக்குரிய இடம் கொடுக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில்  தமிழ் வடிவமும் இசைக்கப்பட்டது.

ஆனால்,  தமிழ்பேசும் மக்களை பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான வைபவங்களிலும  நிகழ்வுகளிலும் தேசிய கீதத்தின் தமிழ் வடிவத்தை பயன்படுத்தும் நடைமுறை இருந்து வந்தது. பெரும்பாலான தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் வைபவங்களில் தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்டது.வடக்கு, கிழக்கிற்கு வெளியில் உள்ள பல தமிழ்மொழிமூலப் பாடசாலைகளில் இந்த நடைமுறை பிரயோகிக்கப்பட்டது.

சிங்களமும் தமிழும்

அந்த நாட்களில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதத்தை இசைப்பதற்கு குறிப்பிட்ட சில பாடசாலை வாத்திய அணிகள் தெரிவு செயாயப்படுவது வழக்கமாக இருந்தது. அப்போது தமிழ் மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து இருக்கவில்லை என்றபோதிலும் கூட, பிரதானமாக தமிழ்பேசும் பிராந்தியங்களில் தமிழ்மொழிமூல பாடசாலைகளிலும் உத்தியோகபூர்வ வைபவங்களிலும் தமிழில் தேசிய கீதம் இசைக்கபடுவதை  அன்றைய அறிவுபூர்வமான அரசாங்கங்கள் அளெகரியமாக பார்க்கவில்லை.

அதேவேளை, இனநெருக்கடி தீவிரமடையத் தொடங்கிய போதிலும் கடந்த நூற்றாண்டின்  ஐம்பதுகளின்  பிற்பகுதியில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளின் முற்பகுதியில் தேசியகீதம் சிங்களத்திலும் தமிழிலும் தொடர்ந்து இசைக்கப்பட்டது.  அறுபதுகளில் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது சிங்களத்திலும் தமிழிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க புதிதாக அமைககப்பட்ட இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை திந்துவைக்க 1974 பிற்பகுதியில் வருகை தந்தபோது சிங்களத்திலும் தமிழிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிரதமர் ரணசிங்க பிரேமதாச  எண்பதுகளில் ' கம்உதாவ ' வீடமைப்புத் திட்டங்களை திறந்துவைக்க யாழ்ப்பாணம்  வந்தவேளையிலும் இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டது.

தேசியமொழி

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதியில் தமிழ்மொழிக்கு சம அந்தஸ்துக்கான  தேடலில் சில முன்னோக்கிய நகர்வுகளை காணக்கூடியதாக இருந்தது. ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு தமிழுக்கு தேசியமொழி அந்தஸ்தை வழக்கியது. அந்த அரசியலமைப்பு தேசிய கீதத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்தையும் வழங்கியது. " ஸ்ரீலங்கா மாதா " இலங்கை குடியரசின் தேசியகீதமாக இருக்கும்.  மூன்றாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டவாறு அதன் சொற்களும் இசையும் இருக்கும்" என்று அரசியலமைப்பின் 7வது பிரிவு  கூறுகிறது.

1978 அரசியலமைப்பில்  தமிழ்  உத்தியோகபூர்வ  மொழி அந்தஸ்தை  அல்ல தேசியமொழி அந்தஸதையே பெற்றுக் கொண்டது. அதே அரசியலமைப்பின் ஏழாவது பிரவின் ஊடாக சிங்களத்தில் தேசியகீதத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், ஏழாவது பிரிவின்  மூன்றாவது பட்டியலின் வழியாக தேசியகீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்புக்கும் அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தமிழில் பிரசுரிக்கப்ட்ட 1978 அரசியலமைப்பின் பிரதிகளும்   அரசாங்க வர்த்தமானியும் தேசியகீதத்தின் தமிழ்ச் சொற்களைக் கொண்டிருந்தன. மூலமுதல் சிங்கள வடிவமும்  தமிழ் மொழிபெயர்ப்பும் உரிய அங்கீகாரத்தைப் பெற்றன.

உத்தியோகபூர்வ மொழி

1987 ஆம் ஆண்டில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தத்தின் வழியாக சிங்களத்துடன் சேர்த்து தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக தரமுயர்த்தப்பட்டது. தமிழ் ஒரு உத்தியோகபூர்வ மொழி என்ற வவகையில், 1988 ஆம் ஆண்டில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 16 வது திருத்தத்தின் ஊடாக தமிழ் நிருவாக மற்றும் சட்டவாக்க துறைகளில் மேலும் மேம்பாட்டை பெற்றுக் கொண்டது. அரசியலமைப்பின் 18 , 19 வது பிரிவுகள் இலங்கையில் தமிழ்மொழி உத்தியோகபூர்வ மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும் என்று தெளிவாக கூறுகின்றன.

தமிழ்  ஒரு உத்தியோகபூர்வ  மொழியாக  தரமுயர்த்தப்பட்டமை தமிழில் தேசிய கீதத்தை  இசைப்பதற்கு பெருமளவு  உற்சாகத்தைக் கொடுத்தது.  ஆனால்,  அதற்கு பின்னரான நிகழ்வுகள்  முந்திச் செல்லத் தொடங்கிவிட்டன. மொழி விவகாரத்தில் வழங்கப்பட்ட இந்த சலுகைகள் எல்லாம் மிகவும் காலம் கடந்து வழங்கப்பட்ட அற்பமானவையாக  நோக்கப்படத் தொடங்கின. இனமோதலில் கட்டவிழ்ந்த புதிய நிலைவரம் தேசியகீதம் இசைப்பதை மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமிழ் அரசியல் சமுதாயத்தில் வழக்கத்தில் இல்லாமல் செய்துவிட்டது.  அதற்கு பிறகு நடந்தவற்றை அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

 நன்றி Virakesari

வர்த்தக‌ விளம்பரங்கள்