ஜனநாயகத்தை பேசுவோர் முதலில் செயல்படுத்துங்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர்

16 மாசி 2025 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 494
ஜனநாயகம் என்பதை மேற்கத்திய நாடுகளின் அடையாளமாக நினைக்கின்றனர். அதே நேரத்தில் உலகின் மற்ற நாடுகளில் ஜனநாயத்துக்கு எதிரான அமைப்புடன் கைகோர்க்கின்றனர். மேற்கத்திய நாடுகள், முதலில் தாங்கள் பேசுவதை செயல்படுத்தட்டும், என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
தேவையான பலன்
இதன்படி தற்போது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் ஓட்டளிப்பு என்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில், நார்வே பிரதமர் ஜோனஸ் கார்ஹ் ஸ்டோர், அமெரிக்க எம்.பி., எலிசா, வர்சோவா மேயர் ரபால் டோராஸ் கோவ்ஸ்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, சர்வதேச அளவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து உள்ளதாகவும், ஜனநாயகம் உணவு அளிக்காது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறினர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தேன். அதன் மை இன்னும் அழியவில்லை. கடந்தாண்டு பார்லிமென்டுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களில், 70 கோடி பேர் ஓட்டளித்தனர். அந்த ஓட்டுகள் அனைத்தும் ஒரே நாளில் எண்ணப்பட்டன.
கடந்த, 10 ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்தின் மீது இந்திய மக்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதனால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பது ஒரு குறிப்பிட்ட நாடுகளில் வேண்டுமானால் இருக்கலாம். பொதுப்படையாக கூற முடியாது.
ஜனநாயகம் உணவு வழங்காது என்பதையும் மறுக்கிறேன். உண்மையான ஜனநாயக நாடாக உள்ளதால், இந்தியாவில் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. மக்கள்தொகையில், 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஜனநாயகம், மக்களுக்கு தேவையான பலன்களை வழங்குகிறது.
சவால்
மேற்கத்திய நாடுகள், ஜனநாயகம் என்பதை தங்களுடைய அடையாளமாக, தாங்கள் உருவாக்கியதாக நினைக்கின்றன.
அதே நேரத்தில் உலகின் மற்ற பகுதிகளில் ஜனநாயகத்துக்கு எதிரான அமைப்புகளுடன் கை கோர்க்கின்றன. தற்போதும் அது தொடர்கிறது. முதலில் தாங்கள் சொல்வதை, மேற்கத்திய நாடுகள் பின்பற்றட்டும்.
அதுபோல உலகின் மற்ற நாடுகளில் உள்ள வெற்றிகரமான ஜனநாயக முறைகளை, மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.
அந்த வெற்றிகரமான ஜனநாயக முறைகளை, அந்த நாடுகளிடமிருந்து மேற்கத்திய நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும்.
பல்வேறு சவால்கள் இருந்தபோதும், மிகவும் குறைவான வருவாய் இருந்தபோதும், ஜனநாயகத்துக்கு உண்மையாக இந்தியா இருந்து வருகிறது. அதுபோல மற்ற நாடுகளில் உள்ள ஜனநாயகத்தையும் மதிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதவி கோருகிறது உக்ரைன்!
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, மூன்று ஆண்டுகளை எட்டியுள்ளது. போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் பேசி வருகிறார்.இந்நிலையில், மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சந்தித்து பேசினர். அப்போது, ''அமெரிக்காவின் உதவி இல்லாமல் உக்ரைனால் மீள முடியாது,'' என, ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். இதற்கு, ''உக்ரைனில் நீடித்த அமைதி திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகிறோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்,'' என, வான்ஸ் பதிலளித்தார்.