அஜித்துடன் விஜய் சேதுபதி நடிக்காதது ஏன்?

16 மாசி 2025 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 1108
தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இதையடுத்து தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், அடுத்தடுத்து ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என எது கொடுத்தாலும் அதில் நடித்து அப்ளாஸ் வாங்கிவிட்டு சென்றார். குறிப்பாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்துவிட்ட விஜய் சேதுபதி, இதுவரை அஜித்துடன் மட்டும் வில்லனாக நடிக்கவே இல்லை.
அஜித்துடன் மட்டும் விஜய் சேதுபதி நடிக்காதது ஏன் என்பது பலரது கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று பெரம்பலூரில் உள்ள கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம், அஜித்துடன் எப்போ நடிப்பீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இதுவரைக்கு நடந்த எதுவுமே நான் திட்டமிட்டு நடக்கவில்லை. எதாச்சும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்துவிடும் என நான் நினைக்கிறேன். இதற்கு முன் நடப்பதாக இருந்தது ஆனால் அது நடக்க முடியாமல் போய்விட்டது. விரைவில் நடக்கும் என நான் நம்புகிறேன் என கூறினார்.
இருப்பினும் எந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் விஜய் சேதுபதி. முன்னதாக அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே கைவிடப்பட்டது. அப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் விக்னேஷ் சிவன். அந்தப் படம் நடக்காமல் போனதை தான் சூசகமாக சொல்லி இருக்கிறார் விஜய் சேதுபதி.
மேலும் அந்த கல்லூரி விழாவில், விஜய் சேதுபதியிடம், உங்களுக்கு ஹீரோவாக நடிப்பது புடிக்குமா என மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், எல்லாமே கேரக்டர்கள் தான். ஆனால் அதில் வில்லனாக நடிப்பது புடிக்கும். ஏனெனில் அதில் நிறைய சுதந்திரம் இருக்கும். வில்லனுக்கென ஒரு வரையறையே இருக்காது. ஆனால் ஹீரோ என்றால் ஒரு வரையறை இருக்கும் அதைமீறி நம்மால் நடிக்க முடியாது என ஓப்பனாக கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.