சாள்-து-கோல் விமான நிலையமும் - ஆறரைக் கோடி பேரும்!!
23 ஐப்பசி 2017 திங்கள் 13:30 | பார்வைகள் : 18525
ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரும் விமான நிலையம் எது..? சாள்-து-கோல் தான்.. அதிலென்ன சந்தேகம்?!! ஏன் இத்தனை பெரிது..? 32.38 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை கொண்டதாலா?? அதுவும் தான். அதை விட.., கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் ஆறரை கோடி பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.
விமான நிலையத்தோடு அமைந்துள்ள Roissypôle வளாகம் மிக பிரசித்தம். உங்களில் பலர் எத்தனையோ தடவைகள் சென்று வந்திருப்பீர்கள். உலகளாவிய சொப்பிங் அனுபவம், உணவகங்கள்... பேரூந்து சேவைகள் RER B என பல சேவைகளோடு.. Air france இன் தலைமையகமும் இங்குதான் உள்ளது.
சரி, நாம் மீண்டும் பயணிகள் பட்டியலுக்கு வருவோம்.. கடந்த 2016 ஆம் ஆண்டில் சாள்-து-கோல் விமான நிலையத்தில் 65,933,145 பயணிகள் வந்து சென்றிருக்கின்றனர். மொத்தமாக 472,950 விமானங்கள் வந்தும் சென்றும் உள்ளன.
இதனாலேயே, உலகின் 10 வது 'பிஸி'யான விமான நிலையமாகவும், ஐரோப்பாவில் ஹீதுரு (Heathrow) நிலையத்துக்கு பின்னர் பிஸியான நிலையமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் மொத்தமாக 2,150,950 மெட்ரிக் தொன் கார்கோ பொருட்களையும் சுமந்து.. சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளது சாள்-து-கோல் நிலையம்!