தமிழகத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலால்...கூட்டணியில் குழப்பம்?

17 மாசி 2025 திங்கள் 03:47 | பார்வைகள் : 778
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவி காலம் ஜூலையில் நிறைவடைய உள்ள நிலையில், காலியாகும் பதவிகளுக்கு இப்போதே போட்டிகள் துவங்கிவிட்டன. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில், எத்தனை இடங்களுக்கு போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுப்பதா, அல்வா கொடுப்பதா என்ற குழப்பம் நீடிக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ராஜ்யசபா தேர்தல், கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு, 18 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மூன்றில் ஒரு பங்கு எம்.பி.,க்களின் பதவி காலம், சுழற்சி அடிப்படையில் நிறைவடையும்.
கடந்த 2019ம் ஆண்டு, அ.தி.மு.க., கூட்டணி சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., சந்திரசேகரன்; தி.மு.க., கூட்டணி சார்பில் தேர்வான, தி.மு.க.,வைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, வில்சன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஆகியோரின் பதவி காலம், வரும் ஜூலை 24ல் நிறைவடைகிறது.
அ.தி.மு.க.,வில் குறை
எனவே, ஜூன் மாதம் ஆறு எம்.பி., பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபையில் தற்போது தி.மு.க.,வுக்கு 134; காங்கிரசுக்கு 17; வி.சி.,க்கு நான்கு; மா.கம்யூ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகள் வரிசையில், அ.தி.மு.க., 66; பா.ம.க., ஐந்து; பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 66 பேரில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., அய்யப்பன், கட்சியில் இருந்து நீக்கப்படாததால், அவர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக நீடிக்கிறார்.
கடந்த 2022ல் ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, தேர்தல் நடந்தது. ஒரு எம்.பி.,க்கு 34 ஓட்டுகள் தேவை.
அப்போது, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., - பா.ஜ., கட்சிகள் இருந்தன. அந்த கூட்டணிக்கு 75 எம்.எல்.ஏ.,க்கள் இருந்ததால், இரண்டு எம்.பி.,க்களை அந்த கூட்டணி பெற முடிந்தது.
தி.மு.க., நான்கு எம்.பி., பதவிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியதால், போட்டியின்றி ஆறு எம்.பி.,க்களும் தேர்வு செய்யப்பட்டனர். இம்முறை இரு கூட்டணியிலும் இழுபறி நிலை நீடிக்கிறது. இதனால் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,வில், பதவி காலம் முடிய உள்ள மூன்று எம்.பி.,க்களும் மீண்டும் வாய்ப்பை எதிர்நோக்குகின்றனர்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுக்கு ஒரு சீட்டை தருவதாக, சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., உறுதி அளித்தது; எனவே, அவருக்கு எம்.பி., பதவி கொடுத்தாக வேண்டும். ம.தி.மு.க.,வை பொறுத்தவரை, அக்கட்சி தி.மு.க., உடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை; எனினும், அக்கட்சி ஒரு சீட்டை எதிர்பார்க்கிறது.
காங்கிரஸ் கட்சி 17 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ளதால், அக்கட்சியும் ஒரு சீட்டை விரும்புகிறது. எனவே, நான்கு சீட்டுகளுக்கு, 3 + 1 + 1 + 1 என்ற போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை தவிர்த்தால், தற்போது 62 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, ஒரு 'சீட்' மட்டும் உறுதியாகி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அக்கட்சி உறுதி அளித்துள்ளது. அதன்படி ஒரு சீட்டை கொடுத்து விட்டால், அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும்.
மற்றொரு சீட்டை பெறுவதற்கு, பா.ம.க. அல்லது பா.ஜ., உதவி தேவை. எனவே, ஒரு சீட்டை நாம் வைத்துக் கொண்டு, மற்றொரு சீட்டுக்கு பா.ம.க., - பா.ஜ., ஆதரவை பெற்றுக்கொள்ளும் பொறுப்பை தே.மு.தி.க.,விடம் விட்டு விடலாமா என, அ.தி.மு.க.,வில் ஆலோசனை நடந்து வருகிறது. இதை அறிந்த தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா,ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, உரிய நேரத்தில் வேட்பாளரை அறிவிப்போம் என அறிவித்து விட்டார். எனவே, அ.தி.மு.க.,விலும் குழப்பம் நீடிக்கிறது.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே, ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டி இருப்பதால், அக்கட்சி கமலுடன் சேர்த்து, ஐந்து வேட்பாளர்களை நிறுத்தலாமா என, யோசித்து வருகிறது. அவ்வாறு அக்கட்சி ஐந்து வேட்பாளர்களையும், அ.தி.மு.க., இரண்டு வேட்பாளர்களையும் நிறுத்தினால், ஓட்டுப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.
இரு கட்சிகளுக்கும் போதுமான ஓட்டுகள் இல்லாததால், குதிரை பேரம் நடக்கும். தி.மு.க., நான்கு வேட்பாளர்களை மட்டும் நிறுத்தி, அ.தி.மு.க.,வுக்கு இரண்டை விட்டு கொடுத்தால், பிரச்னை எழாது.
அதே நேரம் ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்க்கும் காங்கிரஸ், ம.தி.மு.க., போன்ற கட்சிகள், தங்களுக்கு வாய்ப்பு வழங்காவிட்டால், தி.மு.க., மீது அதிருப்தி அடையும். இது கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும். கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கினால், தி.மு.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறையும். எனவே, அங்கும் சிக்கல் நீடிக்கிறது.
அ.தி.மு.க., அல்லது தே.மு.தி.க., சார்பில், பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளிடம், ஆதரவு கேட்டால், அது புது கூட்டணிக்கு பாதை அமைக்கும். எனவே, தமிழகத்தில் பெரிய கட்சிகளான தி.மு.க.,வும், அ.தி.மு.க,வும் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு, அனைத்து கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில், ராஜ்யசபா தேர்தல் மாற்றத்தை, போட்டியை ஏற்படுத்துமா என்பது, ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும்.