ரஷ்ய போர் - உக்ரைன் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

17 மாசி 2025 திங்கள் 10:39 | பார்வைகள் : 1524
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யாவின்(russia) முழு அளவிலான போர் தொடங்கியதிலிருந்து 46,000 க்கும் மேற்பட்ட உக்ரைனிய(ukraine) வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அல்லது சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(volodymyr zelenskyy) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்தப்பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரினால் எத்தனை உக்ரைனியர்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள் என்பது "யாருக்கும் தெரியாது" என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
"எங்களுக்கு ஒரு நிலையான எண்ணிக்கையிலான இழப்புகள் உள்ளன. 46,000 வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டு அல்லது சிறைபிடிக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர்.
அவர்களை பற்றி நீங்கள் உறுதியாக அறிய முடியாது, ஏனென்றால் போரில் காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் அல்லது அவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம்."
சுமார் 19,500 உக்ரைனிய குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.
"மேலும் உக்ரைனின் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை - ஆயிரக்கணக்கா, பல்லாயிரக்கணக்கா என்பது எங்களுக்குத் தெரியாது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெப்ரவரி 4 அன்று, ரஷ்யாவிற்கு எதிரான போரில் 45,100 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 390,000 இராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பாக சவுதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.