சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

17 மாசி 2025 திங்கள் 12:17 | பார்வைகள் : 1399
சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் சன்ஸ்கிரீன் பயன்பாடு சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. தவிர வெயிலின் எதிர்மறை தாக்கம், வயதான அறிகுறிகள், முகப்பரு மற்றும் தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. இது முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்களை குறைக்கவும் உதவுகிறது.
பிரபல அழகு நிபுணர் சரிதா குமாவத் பேசுகையில், கோடை காலத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு சீசனிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் எந்த சேஷனாக இருந்தாலும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். கோடையாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, சன்ஸ்கிரீனை எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்றார். இதனிடையே அழகு நிபுணர்களின் கூற்றுப்படி, சன்ஸ்கிரீன் முகத்தில் ஏற்படும் சன்பர்ன்-ஐ தடுக்க உதவுகிறது. இது தவிர, இது முகத்தில் உள்ள சன் ஸ்பாட்ஸ்களையும் நீக்குகிறது. மேலும் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை சன்ஸ்கிரீன் தடுக்கிறது.
நீச்சல் குளத்தில் நீந்தும்போது, தண்ணீர் சூரியனின் கதிர்களைப் பிரதிபலிப்பதால் சூரிய ஒளியின் தாக்கம் சரும ஆரோக்கியத்தில் எதிரொலிக்கும். எனவே, தண்ணீரில் இறங்குவதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். தினமும் மிதமான அளவில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஒருவர் தினமும் வெயிலில் வெளியே சென்று சூரிய ஒளியில் அதிக நேரம் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவருக்கு சரும புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட காலம் ஒருவர் அதிக நேரம் வெயிலில் நேரம் செலவிட்டால், சருமத்தில் செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர தொடங்கும். இது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
தினமும் வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தில் டார்க் ஸ்பாட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் உருவாகின்றன என்று அழகு நிபுணர் சரிதா குமாவத் கூறினார். ஆனால் தினசரி வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்திற்கு சன்ஸ்கிரீன் தடவுவதால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என்றார். ஆக மொத்தம் எந்த வயதிலும் சருமத்தின் தோற்றம், ஆரோக்கியத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சிறந்த மற்றும் எளிய வழிகளில் ஒன்றாகும்.