காதலர் தினத்தில் பெங்களூரு விமான நிலையம் படைத்த சாதனை

18 மாசி 2025 செவ்வாய் 03:48 | பார்வைகள் : 1095
காதலர் தினத்தன்று, 1,649 மெட்ரிக் டன் எடை கொண்ட 4.4 கோடி (எண்ணிக்கையில்) ரோஜா மலர்களை கையாண்டு பெங்களூரு விமான நிலையம் சாதனை படைத்து உள்ளது.
கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த ரோஜா மலர்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். இதனால், அன்றைய தினம் ரோஜா மலர்களின் தேவை அதிகமாக இருக்கும். விலையும் அதிகமாக இருப்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு 4.4 கோடி ரோஜா மலர்களை ( 1,649 மெட்ரிக் டன்) பெங்களூரு சர்வதேச விமான நிலையம் கையாண்டு உள்ளது. அவை 22 வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் 38 நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: ரோஜா மலர்கள் கடந்த ஆண்டை காட்டிலும் 50 சதவீதம் அதிகம் கையாளப்பட்டு உள்ளது. இதன் மூலம், தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஏற்றுமதியில் பெங்களூரு விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.
ரோஜா மலர்களின் தேவை காரணமாக, சிங்கப்பூர், ஷார்ஜா, குவைத் நியூசிலாந்தின் ஆக்லாந்து, அபுதாபி, கொழும்பு, ரியாத், மணிலா மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் இருந்து ரோஜா மலர்கள் வந்தன. டில்லி, மும்பை, கோல்கட்டா, ஜெய்ப்பூர், உதய்ப்பூர், ஆமதாபாத், அகர்தலா மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களுக்கு 1,344 மெட்ரிக் டன் மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், ரோஜா மலர்கள் வீணாவதை தடுத்ததுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.