60 ரயில் நிலையங்களில் தங்குமிடம்; கூட்ட நெரிசலை தடுக்க ரயில்வே அமைச்சர் திட்டம்!

18 மாசி 2025 செவ்வாய் 03:49 | பார்வைகள் : 367
நாடு முழுவதும் உள்ள 60 பரபரப்பான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தங்குமிடம் வசதி உருவாக்கப்படும்' என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
புதுடில்லி ரயில் நிலையத்தில், கடந்த 15ம் தேதி இரவு ஆயிரக்கணக்கான பயணியர் காத்திருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து குழந்தைகள், ஒன்பது பெண்கள் உட்பட, 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க, நிரந்தர காத்திருப்பு பகுதிகளை உருவாக்கவும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள 60 பரபரப்பான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தங்குமிடம் வசதி உருவாக்கப்படும்.
ரயில் நிலையங்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் தீர்வு காண ஆலோசனைகள் வரவேற்கப்படும். டில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னால் எந்த சதித்திட்டமும் இல்லை.
பிளாட்பார்ம் மாறி ரயில் வந்தது கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருக்காது. விசாரணைக் குழு இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.