Paristamil Navigation Paristamil advert login

தாது மணல் கொள்ளை வழக்குகள் சி.பி.ஐ.,க்கு மாற்றம்

தாது மணல் கொள்ளை வழக்குகள் சி.பி.ஐ.,க்கு மாற்றம்

18 மாசி 2025 செவ்வாய் 03:52 | பார்வைகள் : 443


கடலோர மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில், 5,832 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக நடந்த தாது மணல் கொள்ளை தொடர்பானவழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில், தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்கத் தன்மை உடைய கனிமங்கள், அதிக விலை மதிப்புள்ள தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த, 'வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ்' உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன.

போராட்டம்


இத்தகைய இயற்கை வள சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தாது மணல் கொள்ளை யால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என, 2015ல், தஞ்சாவூரைச் சேர்ந்த விக்டர் ராஜமாணிக்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

பின், சட்ட விரோதமாக தாது மணல் எடுப்பது குறித்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, 2016ல் விசாரித்தது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ, வழக்கறிஞர் வி.சுரேஷ் நியமிக்கப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணையின்போது, அரசு அளித்த அறிக்கை:கடந்த, 2000 முதல், 2016 வரை சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, அரசுக்கு ஏற்பட்ட இழப்பை கணக்கிட்டு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 5,832 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஏற்கிறது. தாது மணல் எடுக்க, ஏழு நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக தாது மணல் எடுப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து, தாது மணல் எடுக்க, 2013ல் தடை விதிக்கப்பட்டு உள்ளது,இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்களும் அறிக்கை அளித்தன.

அந்த அறிக்கையில், 'மூன்று மாவட்டங்களில் உரிமங்கள் வழங்கப்படாத பகுதியான, 234.5 ஹெக்டேர் பரப்பில், ஒரு கோடியே ஒரு லட்சம் டன்னுக்கும் மேலாக, தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்று மாவட்டங்களில், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்த தனியார் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், கடந்த ஆண்டு ஜனவரியில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. அந்த வழக்குகளின் இறுதி விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

உயிர்நாடி


அப்போது, நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வி.சுரேஷ், ''இதுவரை ஐந்து விரிவான அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளேன். அவற்றை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுள்ளன. 'ராயல்டி' தொகை 5,832 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும்.

வசூலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பில் உள்ள தாது மணலை, மாநில அரசு பறிமுதல் செய்து, ஐ.ஆர்.ஏ., என்ற, மத்திய அரசு நிறுவனமான அரிய மணல் ஆலையிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், கனிம வள நிறுவனங்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:நிர்வாகம் என்பது ஆரோக்கியமான பொருளாதாரத்தின் உயிர்நாடி. ஒரு செல் வீரியம் மிக்கதாக இருந்தாலும், முழு அமைப்பும் புற்றுநோயாக மாறும்.

கடும் நடவடிக்கை


சட்ட விரோதங்கள் என்ற, இந்த புற்றுநோய் செல்களை விரைவாக அகற்ற வேண்டும். நாட்டின் இயற்கை வளத்தை, சட்ட விரோதமாக டன் கணக்கில் அள்ளி ஏற்று மதி செய்திருப்பதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த சட்டவிரோத மணல் மாபியா கும்பல் குறித்தும், முறைகேடுகள் குறித்தும், சி.பி.ஐ., விரிவாக விசாரணை நடத்த வேண்டும்.

வழக்குகளின் ஆவணங்களை, நான்கு வாரங்களில், சி.பி.ஐ.,யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். தேவையான புலன் விசாரணை குழுக்களை, சி.பி.ஐ., அமைத்து கொள்ளலாம்.சட்டவிரோத தாது மணலை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்த கனிம வளம், சுங்கம், சுற்றுச்சூழல், பாதுகாப்புத் துறைகள் என, சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்கள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கு விசாரணையை சி.பி.ஐ., இயக்குநர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். தாது மணல் கடத்தல் வாயிலாக, 5,832 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என, அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் வணிக பரிவர்த்தனைகள் குறித்தும், மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

அதுகுறித்த விபரங்களை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, வணிக வரித்துறைக்கு வழங்க வேண்டும். அந்த துறையினர் விசாரணை நடத்தி, தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக, அரசு நியமித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் குழு அளித்த அறிக்கைகள், நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அறிக்கைகள் சட்ட ரீதியாக செல்லும். மறுமதிப்பீட்டின்படி பறிமுதல் செய்யப்பட்ட, ஒரு கோடியே, 40 லட்சம் மெட்ரிக் டன் தாது மணலை, மத்திய அரசின் நிறுவனமான அரிய மணல் ஆலையிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

சட்ட விரோத தாது மணல் கொள்ளை வாயிலாக, அரசுக்கு ஏற்பட்ட, 5,832 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்துவதில், ஏதாவது விதிமீறல் காணப்பட்டால், எந்தவொரு தரப்பும் அது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்.இவ்விவகாரத்தில், அரசு நடவடிக்கையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்