போக்சோ வழக்கில் ஆசிரியர்கள் சிக்கினால் கல்வி சான்றிதழ் ரத்து; தமிழக அரசு அறிவிப்பு

18 மாசி 2025 செவ்வாய் 03:54 | பார்வைகள் : 373
போக்சோ வழக்குகளில், தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின், கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக கல்வி நிறுவனங்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில், தலைமை செயலகத்தில் உயர்நிலை ஆய்வு கூட்டம், சமீபத்தில் நடந்தது.
அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
கல்வி நிறுவனங்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்
போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின், பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள், தகுந்த விதிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்படும்
கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் போது, காவல்துறை சரி பார்ப்பு சான்று பெறுவது அவசியம்
பணியாளர்கள் அனைவரும், குழந்தை பாதுகாப்பு உறுதி மொழி ஆவணத்தில் கையெழுத்திடுவது கட்டாயம்
பள்ளி மாணவர்களுக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, 'சுய பாதுகாப்பு கல்வி' அளிக்க வேண்டும்
அனைத்து ஆசிரியர் பட்டய, பட்டப்படிப்பு பாடத்திட்டங்களில், குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த, பாடத்திட்டம் சேர்க்கப்படும். ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்
மாணவியர் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில், பெண் உதவியாளர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும்
இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில், பெண் உடற்கல்வி ஆசிரியை நியமிக்கப்பட வேண்டும்
விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்வி சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே, மாணவியரை அழைத்து செல்ல வேண்டும்
மாணவியர் விடுதிகளுக்குள், வெளிநபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது. விடுதி பராமரிப்பு பணி, பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே நடக்க வேண்டும்
அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 1098, 14417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கூடுதலாக அமைக்க வேண்டும்
பாலியல் குற்றங்கள் குறித்து தெரிய வந்தால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்
மாணவர் மனு புகார் பெட்டி, பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
அனைத்து பள்ளிகளிலும், முக்கியமான இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.