மூன்று வயது குழந்தை இறப்பு பெற்றோர்கள் மத்தியில் பதட்டம்.

18 மாசி 2025 செவ்வாய் 07:55 | பார்வைகள் : 2311
பிரான்சில் Rochefort-en-Valdaine (Drôme) பகுதியில் மழலையர் பிரிவில் கல்வி கற்று வந்த மூன்று வயது சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமைக்கும், சனிக்கிழமைக்கும் இடையிலான இரவில் அங்குள்ள மருத்துவ மனையில் மூளைக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளான்.
அதற்கு முன்பு வியாழக்கிழமை பாடசாலையில் இருக்கும் போது சிறுவன் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த சிறுவன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளான். இந்த நிலையில் அந்த பாடசாலையில் உள்ள மழலையர் பிரிவு முதல் CM2 வரையான சுமார் நூறு மாணவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் கூடிய தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் Espeluche பாடசாலையில் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு விசேட மனவள மருத்துவ முகாம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு நேரடியாக சுகாதார அமைச்சர் Yannick Neuder அவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளார் என தெரியவருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள (président du Conseil National Professionnel de Pédiatrie) தேசிய குழந்தை மருத்துவக் கவுன்சிலின் தலைவர் "குழந்தைகளுக்கான மூளைக் காய்ச்சல் நோய்த்தடுப்பு மருந்து கட்டாயமாக செலுத்தப்பட வேண்டும் எனும் நிலமையை பெற்றோர்கள் உணர வேண்டும்" என வற்புறுத்தி உள்ளார்.