Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் மற்றும் பிரிஜித்! - அன்றும் இன்றும்!!

மக்ரோன் மற்றும் பிரிஜித்! - அன்றும் இன்றும்!!

10 ஐப்பசி 2017 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 20501


இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். 
 
அன்று மே மாதம் 17 ஆம் திகதி, 1993 ஆம் ஆண்டு. மேடை நாடகத்தின் ஒரு பகுதி அது. இம்மானுவல் மக்ரோன் தன் முகத்தில் கறுப்பு நிற வர்ணம் பூசிக்கொண்டு, மேடை ஏறுகிறார்..  முழங்கால் வரை நீளும் ஒரு உடை அணிந்திருக்கிறார். இரு கைகளையும் அகல விரித்து வைத்துக்கொண்டு சில வசனங்களை பேசி நடிக்கிறார். சில நிமிடங்கள் அது நீடிக்கிறது. பின்னர் கைதட்டல்களுடன் அந்த நாடகம் முடிவுக்கு வர.. 
 
நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் பாராட்டப்படுகிறார்கள். நாடகத்தை தயாரித்த ஆசிரியர் பிரிஜித் பாராட்டப்படுகிறார். மக்ரோனின் நடிப்பை பாராட்டும் விதமாக, இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். அப்போது மக்ரோனுக்கு 15 வயது. ஆசிரியர் பிரிஜித்துக்கு 40 வயது! 
 
25 வருடங்களுக்கு பின்னர்,
 
மே மாதம், 14 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு. பிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நீண்ட இராணுவ அணிவகுப்புடன் எலிசேயில் நடந்து வருகிறார். 
 
கரு நீல கோர்ட் அணிந்து கம்பீரமாக ஜனாதிபதியாக பொறுப்பேற்கிறார். முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்துக்கு கை குலுக்குகிறார்.. தனது கம்பீரமான குரலினால் 'உலகிற்கும்.. ஐரோப்பாவுக்கும் பிரான்ஸ் தேவை..' என தன் பேச்சை ஆரம்பிக்கிறார்..
 
நாட்டின் புதிய முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் மிக அழகான உடையில் அருகில் நின்றிருக்கிறார். மக்ரோனின் உரையை சந்தோசமாகவும் பெருமையாகவும் பார்த்துக்கொண்டு நிற்கிறார். மக்ரோன் உரையை முடித்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய இடத்துக்கு வந்து பிரிஜித் அருகே நிற்கின்றார். 
 
இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.  அப்போது மக்ரோனுக்கு 39 வயது, அவரது மனைவி பிரிஜித் மக்ரோனுக்கு 64 வயது!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்