கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் உரையாற்றினார் !

18 மாசி 2025 செவ்வாய் 16:15 | பார்வைகள் : 687
தேசிய மக்கள் சக்தி அரசின் 2025ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17) காலை 10.35 மணிக்கு சமர்ப்பித்தார்.
ஜனாதிபதியின் உரை அரச தரப்பினரின் பெரு வரவேற்புக்கு மத்தியில் 2 மணித்தியாலமும் 45 நிமிடங்கள் வரை நீண்டது.
பாராளுமன்றம் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவு - செலவுத் திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
கறுப்பு ஃபைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி
பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை சமர்ப்பிக்க சபாநாயகரினால் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தபோது சபையின் உறுப்பினர்கள் சபைக்கு வரும் நுழைவாயில் வழியாக கறுப்பு நிற பைலுடன் ஜனாதிபதியின் ஆசனத்துக்கு வந்தார். ஜனாதிபதி சபைக்குள் வரும்போது அரச தரப்பினர் எழுந்து நின்று, மேசையில் தட்டி அவரை வரவேற்றனர்.
சபாநாயகர் கலரியில் நிறைந்திருந்த வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள்!
தேசிய மக்கள் சக்தி அரசின் 2025ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு - செலவுத்திட்ட உரையை அவதானிப்பதற்காக வெளிநாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகளினால் சபாநாயகர் கலரி நிறைந்திருந்தது.
இவர்களுடன் மாகாணங்களின் ஆளுநர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், உயரதிகாரிகள் மக்கள் கலரியில் நிறைந்திருந்தனர். சபாநாயகர் சபைக்குள் வரும்போதும் ஜனாதிபதி சபைக்குள் வரும்போதும் இவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
வழக்கத்துக்கு மாறாக வந்தவர்களும் வராதவர்களும்
இதேவேளை இம்முறை வரவு - செலவுத் திட்ட உரையை அவதானிப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் வருகைதந்த அனைத்து பல்கலைக்கழகங்களினதும் துணைவேந்தர்களும் மக்கள் கலரியில் அமர்ந்திருந்தனர்.
எனினும், வழக்கமாக வரவு - செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படும்போது முப்படைகளின் தளபதிகள், மதத் தலைவர்கள் மக்கள் கலரியில் அமர்ந்திருப்பார்கள். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக இவர்கள் எவரையும் மக்கள் கலரியில் காண முடியவில்லை.
ஜனாதிபதியின் நல்ல திட்டங்களுக்கு மேசையில் தட்டி வரவேற்ற ஆளும் தரப்பு
ஜனாதிபதி வரவு - செவு திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கையில் நல்ல செயற்றிட்டங்களை முன்வைக்கும்போது அதற்கு ஆதரவளித்து ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மேசையில் தட்டி அதனை வரவேற்றதுடன் எதிர்க்கட்சியினர் மெளனமாக இருந்து உரையை செவிசாய்த்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
ஹர்ஷ எம்.பி.யை கிண்டலடித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி உரை நிகழ்த்தியபோது வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் அறிவிப்புகளையும் விடுத்தபோது அரச தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்பளித்துக்கொண்டிருந்தனர். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ஹர்ஷ டி சில்வா ஏதோ ஜனாதிபதியைப் பார்த்துக் கூறியபோது, அதற்கு ஜனாதிபதி ''ஹர்ஷ நீங்கள் கேட்பதனை என்னால் தரமுடியாது. கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை நீங்கள் உங்கள் கட்சித்தலைவரிடம் தான் கேட்க வேண்டும்'' என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறவே சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.
இதன்போது ஹர்ஷ டி சில்வாவும் சிரித்துவிட்டு அமைதியாக இருந்தார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பக்கத்தில் அமர்ந்திருந்த கஜந்த கருணாதிலக்கவை திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக இருந்தார்.
ஜனாதிபதிக்கு நன்றி செலுத்திய மனோ கணேசன் எம்.பி
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வரவு - செலவுத் திட்ட உரையில் மலையக மக்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் “மலையகம்” என்ற வார்த்தையை பல தடவைகள் மொழிந்து உரையாற்றி வந்தார்.
இதன்போது சபையில் இருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், மலையகம் என தெரிவித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இதற்கு ஜனாதிபதியும் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் உரையாற்றிய ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தி அரசினதும் தனதும் 2025ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு - செலவுத் திட்ட உரையை காலை 10.35 மணிக்கு ஆரம்பித்த ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க பிற்பகல் 1.15 மணி வரையான 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் தொடர்ந்தும் உரையாற்றினார்.
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையில் இருந்து வெளியில் சென்று சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் சபைக்கு வந்தனர். இன்னும் சிலர் சபைக்குள் திரும்ப வரவில்லை.
தேநீர் விருந்துபசாரத்துக்கு சபாநாயகர் அழைப்பு
ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரை நிறைவடைந்த பின்னர் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், அனைவரையும் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
அதன் அடிப்படையில் அரச தரப்பினர், எதிர்க்கட்சியினர், வெளிநாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், மாகாணங்களின் ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயரதிகாரிகள், பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது.
நன்றி virakesari