எனக்கு பாதுகாப்பு வழங்குங்கள் - நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா கோரிக்கை

19 மாசி 2025 புதன் 16:12 | பார்வைகள் : 1642
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கொழும்பு நீதிமன்றத்தில் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளேன். நான் பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.
அதனால் பாராளுமன்ற அமர்வு காலத்திலாவது எனக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். இது முக்கியமான விடயமாக உள்ளது என்றார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.