Paristamil Navigation Paristamil advert login

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வழக்கு; உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வழக்கு; உயர் நீதிமன்றம் உத்தரவு

20 மாசி 2025 வியாழன் 03:09 | பார்வைகள் : 673


மதுரை திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர தாக்கலான வழக்கில், மனுதாரரின் மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை சுந்தரவடிவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க மற்றும் ஆடு, கோழிகளை பலியிட முயற்சித்து, அமைதியின்மையை சிலர் ஏற்படுத்தியுள்ளனர். ஹிந்துக்களின் புனிதத்தலமான மலையை பாதுகாக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில் பிப்., 4ல் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரி மறுக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் பிப்., 3 முதல் பிப்., 4 வரை போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதித்து 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் உத்தரவிட்டார். இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மதுரை முருகன், 'மக்கள் போராட்டத்தில் பங்கேற்க வர வேண்டாம். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.

ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட பொதுச்செயலர் கலாநிதி மாறன், 'திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க முயற்சிப்போரை கண்டித்து, பிப்.,4 ல் அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.

பிப்., 4ல் அவசர வழக்குகளாக விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அன்றே பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதித்தது. அரசு தரப்பில் பிப்., 19ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமணக் கோவில்கள், பின்புறம் உள்ள தென்பரங்குன்றம்உமையாண்டவர் குடைவரை கோவிலை பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த மலையையும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இம்மனு மற்றும் சுந்தரவடிவேல், முருகன் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன்விசாரணைக்கு வந்தன.

தமிழக அரசு தரப்பு, 'இம்மனுக்கள் பயனற்றதாகி விட்டன. மேலும் விசாரிக்க வேண்டியதில்லை' என கூறியது.இவ்வழக்குகளில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனு செய்த மதுரை சரவணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:

கடந்த 1947 ஆக., 15ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்ததோ, அப்படியே தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 கூறுகிறது. இது, பாபர் மசூதி - ராமஜென்ம பூமி விவகாரத்திற்கு பொருந்தாது என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையும் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, அங்கு நிலுவையில் உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் கூறியதாவது:

சுந்தரவடிவேல், முருகனின் மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. மற்றொரு மனுதாரரான ரமேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை அதிகாரிகள் விரைவாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்