ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான்

20 மாசி 2025 வியாழன் 08:47 | பார்வைகள் : 932
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ஓட்டங்கள் சேர்த்தது.
தொடக்க ஆட்டக்காரர் வில் யங் மற்றும் டாம் லேதம் இணைந்து 118 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வில் யங், 113 பந்துகளில் 107 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதிவரை களத்தில் இருந்த டாம் லேதம், 104 பந்துகளில் 118 ஓட்டங்கள் குவித்தார்.
321 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், சவுத் ஷகீல் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.
சவுத் ஷகீல் வெறும் ஆறு ஓட்டங்களுடன் நடையை கட்ட, கேப்டன் ரிஸ்வான் 3 ஓட்டங்கள், ஃபகர் ஸமான் 24 ஓட்டங்கள், தய்யப் தாஹிர் 1, ஷாஹின் அஃப்ரிடி 14, நஸீம் ஷா 13 என அணி தடுமாறியது.
பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்து அணியை சமநிலைப்படுத்த போராடினார். மற்றும் குஷ்தில் ஷா 69 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஏற்ற உதவினார்.
இறுதியில் 47 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 2000, 2006, 2009, 2025 என இதுவரை நியூசிலாந்து அணியுடன் மோதிய 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.