பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்

20 மாசி 2025 வியாழன் 11:13 | பார்வைகள் : 717
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பல விஷயங்கள் நடக்கின்றனர். அதாவது பாலியல் துன்புறுத்தல், பாலியல் குற்றங்கள், சைபர் கிரைம் போன்றவையாகும். இவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பது பெரும் சவாலான ஒரு காரியம் ஆகும். ஸ்கூல், காலேஜ், அலுவலகம் மற்றும் பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பல விஷயங்கள் நடப்பதை செய்திகளில் நாம் பார்க்கிறோம். உலக சுகாதார மையம் வெளியிட்ட ஒரு தகவலின் படி, மூன்றில் ஒரு பெண் தினமும் பாலியல் துன்புறுத்தலுக்கு பாதிக்கப்படுகிறாள். இப்படி பெண்களுக்கு எதிராக பல காரியங்கள் நடப்பதால் பெண் குழந்தைகளிடம் பாதுகாப்பு குறித்து எடுத்துச் செல்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து கண்டிப்பாக சொல்ல வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தன்னுடைய முழு பெயர், பெற்றோரின் பெயர், வீட்டு முகவரி, பெற்றோரின் போன் நம்பர் ஆகியவை கண்டிப்பாக மனப்பாடமாக தெரிந்து இருக்க வேண்டும்.
பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு குங்ஃபூ, கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்க வைக்க வேண்டும். ஏனெனில் எதிர்பாராத விதமாக ஏதேனும் ஆபத்துகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது இவை அவர்களுக்கு பெரிதும் உதவும்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண் குழந்தைகளுக்கு எந்த சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும்? கடினமான சூழ்நிலைகளை எப்படி சுலபமாக கையாள வேண்டும்? என்பதை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் விளையாட்டு மூலம் இது குறித்த விழிப்புணர்வை நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
குட் டச் மற்றும் பேட் டச் குறித்து பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் பல பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே இதை தங்களது பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை.
சில பெண் பிள்ளைகள் ரொம்பவே துருதுருவென்று இருப்பார்கள். அவர்கள் எல்லாரிடமும் ரொம்பவே எளிதாக பேசுவார்கள் பழகுவார்கள். ஆனால் இந்த பழக்கமானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தவிர்க்க வேண்டும் அது அவர்களுக்கு நல்லதல்ல. அதனால் அவர்கள் பாதிக்கப்படலாம். முக்கியமாக தெரியாத நபர்களிடம் எந்தவொரு பொருள்கள், சாக்லேட் போன்ற எதையும் வாங்க கூடாது வேண்டாம் என்றும், மறுப்பு தெரிவிக்குமாறு குழந்தையிடம் சொல்லுங்கள்.
குழந்தை யாரிடமாவது அசெளகரியமாக உணர்ந்தால் உடனே அந்த நபரிடம் அப்படி செய்யக்கூடாது என்று சொல்ல பழக்கப்படுத்துங்கள்.
இன்றைய நவீன காலகட்டத்தில் சிறுவயதிலேயே குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் தேவையானதை மட்டுமே பார்க்கவோ அல்லது பயன்படுத்துவோ வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.