தலைவர்களின் சிலைகள் அகற்றப்படுமா?: ஐகோர்ட் எதிர்ப்பு

21 மாசி 2025 வெள்ளி 04:52 | பார்வைகள் : 804
அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மற்றும் கொடிக்கம்பங்களை அவர்களின் சொந்த அலுவலகங்களில் நிறுவிக் கொள்ளலாம். பொது இடங்களில் அவற்றை நிறுவுவது ஏற்புடையதல்ல; அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கோவில் குளக்கரை பகுதியில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமிப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை, அ.தி.மு.க., கொடிக்கம்பத்தை அகற்ற தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்த போது, இவ்வாறு கண்டிப்புடன் தெரிவித்தது.
இதனால், தெருவுக்கு தெரு வைக்கப்பட்டுள்ள கட்சித் தலைவர்களின் சிலைகள் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திருவிடைமருதுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் முத்துக்கிருஷ்ணன் தாக்கல் செய்த மனு விபரம்:
திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் சாலை, நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில் குளக்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை, அ.தி.மு.க., கொடிக்கம்பம், 35 ஆண்டுகளாக உள்ளன. இதனால், போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லை.
இந்த சிலை, கொடிக்கம்பம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை அகற்ற கும்பகோணம் உதவி கோட்ட பொறியாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
சிலை, கொடிக்கம்பத்தை அகற்றக்கூடாது என, கலெக்டர், கும்பகோணம் தாசில்தார், உதவி கோட்ட பொறியாளர், மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை கமிஷனர், சீனிவாச பெருமாள் கோவில் செயல் அலுவலர், நாச்சியார் கோவில் போலீசாருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
எம்.ஜி.ஆர்., சிலை, கொடிக்கம்பத்தை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பு அளித்த பதிலில், 'பொது இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள், 'அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலைகள், கொடிக்கம்பங்களை அவர்களின் சொந்த அலுவலகங்களில் நிறுவலாம்; பொது இடங்களில் நிறுவுவது ஏற்புடையதல்ல. அது எந்தக்கட்சி, இயக்கமாக இருந்தாலும் சரி; அனுமதிக்க முடியாது. இந்த மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும்' என்றனர்.
மனுதாரர் தரப்பில், மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை பதிவு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
ஏற்கனவே பொது இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பத்தை அகற்ற, அரசுக்கு 12 வாரங்கள் கெடு விதித்துள்ளது ஐகோர்ட் கிளை.
இந்நிலையில், ஐகோர்ட் கிளையின் இந்த உத்தரவால், இனி பொது இடங்களில் கட்சிகள் தங்கள் தலைவர்களின் சிலைகளை நிறுவ முடியாது. போக்குவரத்திற்கு இடையூறாக சிலைகள் அமையாது. ஏற்கனவே உள்ள சிலைகளும் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.