Paristamil Navigation Paristamil advert login

நேரத்தை சொல்லுங்கள்… தனி ஆளாக அண்ணாசாலை வருகிறேன்: உதயநிதி சவாலை ஏற்றார் அண்ணாமலை

நேரத்தை சொல்லுங்கள்… தனி ஆளாக அண்ணாசாலை வருகிறேன்: உதயநிதி சவாலை ஏற்றார் அண்ணாமலை

21 மாசி 2025 வெள்ளி 04:56 | பார்வைகள் : 817


அண்ணா சாலையில் எந்த இடம், நேரம், நாள் என்பதை தி.மு.க., முடிவு செய்ய வேண்டும். தனி ஆளாக அங்கு வருகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தி.மு.க., பா.ஜ., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது; பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார் அண்ணாமலை. தமிழகத்திற்கான நிதியை பெற்றுத்தர துப்பில்லை. போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க, நான் வீட்டுகிட்ட தான் இருப்பேன். இன்று மாலை இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க. இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சேலத்தில் நிருபர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: நாளை காசி தமிழ் சங்கமம், கும்பமேளாவில் பங்கேற்க உள்ளேன். அதற்கு பிறகு கோவைக்கு அமித்ஷா வருகிறார். அடுத்த வாரம் சென்னை வருகிறேன். அண்ணா சாலையில் எங்கு வர வேண்டும் என தி.மு.க.,க்காரன் நேரத்தையும், நாளையும், இடத்தையும் குறிக்கட்டும். அண்ணா சாலையில் எந்த இடம் என்பதை முடிவு பண்ணட்டும். அங்கே வருகிறேன். பா.ஜ., தொண்டர்கள் வர மாட்டார்கள். தனி ஆளாக வருகிறேன். நீ மொத்த படையையும், தி.மு.க., படையையும், போலீஸ் படையையும் வைத்து நிறுத்தி பார். நேற்று நான் சொன்னதில் இருந்து பின் வாங்கப்போவது இல்லை.

'கெட் அவுட் மோடி' என்ற வார்த்தையை துணை முதல்வர் உதயநிதி மேடையில் இருந்து பயன்படுத்துகிறார். அவர் வாயில் இருந்து வரட்டும். இன்று சமூக வலைதளத்தில் ஒரு பக்கம் ' கெட் அவுட் மோடி' என ஒரு குரூப். இன்னொரு பக்கம், ' பாலிடாயில் பாபு' என ஒரு குரூப். இரண்டு பேரும் சமூக வலைதளத்தில் கருத்து பரிமாற்றம் செய்கின்றனர்.

இன்று முழுவதும் தி.மு.க., ஐ.டி., விங் முக்கி முக்கி இரவு முழுவதும் அமர்ந்து ' கெட் அவுட் மோடி' எவ்வளவு டுவீட் போட முடியுமோ போடுங்க. நாளை காலை 6 மணிக்கு சரியாக என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ' கெட் அவுட் ஸ்டாலின்' என டுவீட் போடுகிறேன். எவ்வளவு டுவீட் போகுதுனு பார்க்கிறேன். மொத்த தி.மு.க., ஐ.டி., விங்கிற்கும் சவால் விடுகிறேன். உனக்கு 24 மணி நேரம் கொடுத்துவிட்டேன். நேற்று ஆரம்பித்து விட்டீர்கள். நாளை வரை நேரம் கொடுக்கிறேன். அரசு இயந்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி ' கெட் அவுட் மோடி' என எவ்வளவு டுவீட் போட முடியுமோ போட்டுக்கோ. நாளை காலை 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன். தமிழகத்தில் இருந்து ஸ்டாலின் வெளியே போ.

ஆட்சி செய்ய தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தரமான எந்த வசதியும் இல்லை. இதனால், ஸ்டாலின் அவர்களே, நீங்களும் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள். நாளை காலையில் 6 மணிக்கு ' கெட் அவுட் ஸ்டாலின் ' என ஆரம்பிக்கிறேன். எவ்வளவு டுவீட் போட்டீர்களோ மொத்தமாக குறிப்பு எடுத்து கணக்கு எடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை 6 மணியில் இருந்து பா.ஜ.,வின் காலம். நாங்க எவ்வளவு போடுறோம்னு கணக்கெடுத்து பாருங்க. நீ போடும் டுவிட்டுக்கு பா.ஜ., தொண்டர்கள்ல, மக்கள் போடும் டுவீட்டுக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்குனு நாளை மறுநாள் காலையில் பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருகிறேன். இன்று ஒரு நாள் தி.மு.க.,வுக்கு கொடுத்தாச்சு. எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்க. நாளைக்கு எங்களின் நாள். காலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறேன். கெட் அவுட் ஸ்டாலின். முழு இந்தியாவையும் சேர்ந்து எங்களை விட அதிக டுவீட் போட்டு காண்பிக்க வேண்டும். சவால் விடுகிறேன்.

எங்களின் அரசியல் இப்படி தான் இருக்கும். 26ம் தேதி தமிழகத்தில் இருக்கிறேன். நேரம் இடத்தை அண்ணாசாலையில் இங்கு வந்து காட்டுனு சொல்லு. வர முடியாதா… தனி ஆளாக வருகிறேன். தடுத்து நிறுத்து. உதயநிதிக்கு அவரது பாணியில் தான் பதில். மரியாதை கொடுத்தால் மரியாதை இருக்கும். மரியாதை இல்லை என்றால் என்னுடைய வாயில் இருந்து உதயநிதி தொடர்பான வார்த்தையில் மரியாதை இருக்காது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்