பிரதீப் ரங்கநான் நடித்துள்ள எப்படியிருக்கிறது டிராகன்?

21 மாசி 2025 வெள்ளி 08:31 | பார்வைகள் : 1263
மற்றவரின் வாய்ப்பை திருட்டுத்தனமாக தட்டிப்பறிப்பதால் ஏற்படும் குற்ற உணர்வின் அடர்த்தியையும், கல்வியின் முக்கியத்துவத்தையும், ஜாலி கலந்த ரகளையான எமோஷனல் ட்ராமாவாக சொல்லியிருக்கும் படம்தான் ‘டிராகன்’.
வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் ராகவன் (பிரதீப் ரங்கநாதன்). அடாவடித்தனத்துடன் அரியர் வைத்துக் கொண்டு சுற்றுவதே ‘மாஸ்’ என்ற தொன்றுதொட்ட ‘ஜிகினா’ வார்த்தைகளுக்கு பலியாகி 48 அரியர்களுடன் ஜாலியாக வலம் வருகிறார்.
ஒரு கட்டத்தில் அரியரை க்ளியர் செய்யாமலேயே கல்லூரியிலிருந்து வெளியேறிவிடும் ராகவன், வேலைக்கு செல்வதாக வீட்டில் பொய் சொல்லி நண்பர்கள் ரூமில் ராஜ வாழ்க்கை வாழ்கிறார். இடையில் காதல் தோல்வியால் மது போதையிலிருந்து தெளிந்தவர் போல வாழ்க்கையில் ‘இன்ஸ்டன்ட்’ வெற்றியை நோக்கி அலைகிறார். இந்த ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு அவர் என்ன செய்தார்? அது அவரை எங்கே கொண்டு போய் நிறுத்தியது என்பது தான் ‘டிராகன்’ படத்தின் மீதிக்கதை.
அரியரை வைத்துக்கொண்டு, யாருக்கும் அடங்காமல், அடிதடி, சண்டை, காதல் என ஜாலியாக சுற்றித் திரியும் இளைஞனின் வாழ்வில் நிகழும் மாற்றங்களின் தொகுப்பாக உருவாகியிருக்கும் இப்படம் பெரிய அளவில் எங்கும் பெரிய அளவில் போரடிக்காமல் நகர்கிறது.
‘டிராகன்’ பெயருக்கான காரணத்தை விளக்கும் காட்சி தொடங்கி, மிஷ்கின் என்ட்ரி, காதல் காட்சிகள், எப்போதும் தஞ்சம் புகும் நண்பர்கள் வீட்டில் நடக்கும் சம்பவங்கள், இன்ஸ்டா ரீல்ஸ்களை கலாய்த்தது, வேலைக்கு செல்வது போல நடிப்பது, சம்பளத்தை வைத்து செய்யும் பித்தலாட்டம் என டெம்ப்ளேட் காட்சிகளுக்குள் புதிய ஐடியாக்கள் கவனிக்க வைக்கிறது.
ஆனால் இடையில் காதல் தோல்வி என்ற அரதப்பழசான கான்செப்டையும், அதற்கு முழு காரணமாக காதலியை குற்றம் சாட்டுவதையும், ‘ஏன்டி விட்டுப்போன’ பாடலும் அவுட்டேட்! வேலைக்கு செல்லாமல், ஊர் சுற்றுபவரை ஒரு பெண் ஏற்றுகொள்ள வேண்டும் என நினைப்பதும் அதை மறுக்கும்போது சோக பாடலை பாடுவதும் அப்டேட் எப்போ ஆவீங்க ப்ரோ என கேட்க வைக்கிறது.
தவிர்த்து, விஜே சித்து உள்ளிட்ட நண்பர்களின் ஒன்லைன்கள் ஆங்காங்கே நன்றாகவே எடுபடுகின்றன. ஒரே பாடலில் ஓஹோ என்ற வளர்ச்சி ‘சூர்யவம்சமாக’ இருந்தாலும் திரையில் திகட்டவில்லை. எல்லாவற்றையும் தாண்டி திரையரங்கை அதிர வைக்கும் இடைவேளைக் காட்சியும் பின்னணி இசையும் ரசிகர்களின் கொண்டாட்டம்.
இரண்டாம் பாதியில் ஹர்ஷத் கானின் அட்டகாசங்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக மிஷ்கினின் அசால்ட்டான அணுகுமுறைகள், சில திருப்பங்கள், அனுபமாவின் ரீ- என்ட்ரீ சீன், இன்டர்வியூ காட்சி, “மாட்டிக்கின்னாரு ஒருத்தரு’ பாடல் என தியேட்டர் தருணங்கள் ஏராளம்.
இறுதியில் சின்ன சர்ப்ரைஸூம் உண்டு. அதுவரை ஜாலியாக சென்ற படத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் க்ளைமாக்ஸ், எமோஷனல் காட்சிகள், தந்தையின் பாசத்தை உணர்த்தும் காட்சி வழியனுப்பும்போது நெகிழ வைக்கின்றன.
இப்படியெல்லாமும் இருந்தாலும் ‘கன்வீனியன் ரைட்டிங்’கில் படம் சிக்கி கொள்கிறது. எந்த லாஜிக்கை பற்றியும் கவலைப்படாமல் தனக்கேற்றார்போல இயக்குநர் படத்தின் காட்சிகளை எழுதியிருப்பது இப்படியெல்லாமா நடக்கும் என எண்ண வைக்கிறது.
காதலியை குற்றம் சாட்டிய பின் நாயனுக்கு வரும் எழுச்சி, பின்னர் தியாகத்தின் சுடராக பற்றி எரியும் காதலி, எல்லாம் செய்து முடித்துவிட்டு இறுதியில் சொல்லும் ‘தேவர் மகன்’ பாணியிலான அட்வைஸ், சட்டென திருந்தும் நல்லவர்கள், நினைத்த நொடியில் மாறிவிடும் வாழ்க்கை என குறைந்த பட்ச லாஜிக்கையும் காண முடியாத சோகம்
‘தப்பு பண்ணா வாழ்க்கையில நிம்மதியா இருக்க முடியும் நினைக்கிறோம். ஆனா அப்படி வாழ முடியாது’, ‘ஒரு தப்பு பண்ணா வாழ்க்கை மாறிடும்னா எதுவும் தப்பில்ல’ போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. யாரோ ஒருவர் காசுக்காக செய்யும் செயல்கள் மற்றவரின் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடும் என சொல்லும் இடம் சிறப்பு.
வழித்த மீசை, ஒல்லியான தேகத்துடன் பள்ளி மாணவராகவும், சுருள் முடி, பொறுப்பற்ற கல்லூரி மாணவராகவும் இளைஞர்களின் பிரதிபலிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் அழும் காட்சி, மாட்டிக்கொண்டு முழிக்கும் இடங்களில் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். சில இடங்களில் தனுஷின் சாயல் இல்லாமல் இல்லை.
அனுபமாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் வெகு சிறப்பாக கையாண்டிருக்கிறார். கறார் கலந்த ஜாலியான கல்லூரி பிரின்சிபலாக மிஷ்கின் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்க, ஐடி நிறுவனத்தை சேர்ந்தவராக கவுதம் மேனன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
நாயகியாக கயடு லோஹர் ஈர்க்கிறார். அப்பாவி தந்தையாக ஜார்ஜ் மரியானின் இறுதி வசன் உருக்கம். விஜே சித்துவிடம் அழுத்தமான முக ரியாக்சன்ஸ் மிஸ்ஸிங். அர்ஷத் கான் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
லியோன் ஜேம்ஸ் பாடல்களும், குறிப்பாக பின்னணி இசை தியேட்டருக்கான படமாக இதை மாற்றுவதற்கு உதவுகிறது. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவும், பிரதீப் இ ராகவனின் படத்தொகுப்பும் பலம். மொத்தமாக படம் ஜாலியான ஒரு எமோஷனல் ரைடு. ஸ்டியோ டைப் காட்சிகள், சில குறைகள் இருந்தாலும், லாஜிக் பார்க்காமல் பார்ப்பவர்களுக்கு ஏற்ற தியேட்டர் படம். | பின்குறிப்பு: ட்ரெய்லரில் ‘டான்’ படத்தின் காட்சிகளைபோல தென்பட்டாலும் அந்தப் படத்துக்கும் இதுக்கும் தொடர்பில்லை.