அரசியல் செய்யாமல் உதவ வேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

22 மாசி 2025 சனி 05:00 | பார்வைகள் : 182
சென்னை:கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை அறிக்கை:
தமிழ்மொழி அழிவில்லாதது. தமிழ் கலாசாரம் உலகமயமானது. தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை உலகறிய செய்ய அரசு உறுதி கொண்டுள்ளது. அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மீது எந்த மொழியையும் திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை. எந்த வகையிலும், தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை.
சமக்ர சிக்ஷா மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் ஆகிய இரண்டும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆகும். அறிவியல் கல்வியில் கவனம் செலுத்தும், தமிழ்வழி கல்வியில் கவனம் செலுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை செயல்படுத்தாமல் தமிழ்நாடு ரூ.5000 கோடியை இழக்கிறது.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.
மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி. ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.