சி.பி.எஸ்.இ., பள்ளி அனுமதிக்கான விதிமுறையில் அதிரடி திருத்தம்

22 மாசி 2025 சனி 05:02 | பார்வைகள் : 205
தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசு, மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லை என தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மத்திய அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படுகின்றன. தனியார் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கற்றல் வாரியம் அனுமதி வழங்கி வருகிறது.
இதன்படி, மாநிலங்களில் துவங்கப்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம். இந்நிலையில், இந்த விதியில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., செயலர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தனியார் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியமாக இருந்தது. புதிய விதிகளின்படி, அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி அவ்வாறு தடையில்லா சான்றிதழ் பெற அவசியம் இல்லை.
தனியார் நிறுவனங்கள் பள்ளி துவங்குவதற்கான அங்கீகாரம் கோரி மத்திய அரசிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபனை உள்ளதா என மாநில கல்வித் துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காத பட்சத்தில், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.