Paristamil Navigation Paristamil advert login

மும்மொழி திட்டத்தை ஏற்காததால் தமிழகம் இழப்பது ரூ. 5000 கோடி

மும்மொழி திட்டத்தை ஏற்காததால் தமிழகம் இழப்பது ரூ. 5000 கோடி

22 மாசி 2025 சனி 05:06 | பார்வைகள் : 251


மும்மொழி திட்டத்தை ஏற்காததால், தமிழகம் இழப்பது 5,000 கோடி ரூபாய்' என்று தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'எந்த மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்கவில்லை. கல்வியை அரசியலாக்கி அச்சுறுத்த வேண்டாம்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமருக்கு அனுப்பியுள்ள தங்களின் கடிதமானது, மோடி அரசால் உயர்த்திப் பிடிக்கப்படும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது. நல்ல எண்ணத்துடன் எழுதப்பட்டதாக தெரியவில்லை. கற்பனையான கவலை களை கொண்டதாக உள்ளதுடன், முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கங்களை கொண்டுள்ளது. அதனால், நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்த பொறுப்புணர்வுடன், இந்த பதில் கடிதத்தை எழுதுகிறேன்.

இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ள மாநில அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் அறிவு, திறன் மேம்பாடு, எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.

பிரெய்லி மொழி பெயர்ப்பு

'தேசிய கல்வி கொள்கை 2020' என்பது, ஒரு சீர்திருத்தம் மட்டுமல்ல; நம் மொழி, கலாசார பன்முகத் தன்மையை பாதுகாத்து வலுப்படுத்தி, இந்தியாவின் கல்வி முறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டுஉள்ளது.

கடந்த 2022 மே 26ல் சென்னை வந்த பிரதமர் மோடி, 'தமிழ் மொழி நிரந்தரமானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழ் மொழி, கலாசாரத்தை பரப்புவதில் உறுதியாக இருக்கிறோம்' என்றார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, நமது பன்முகத்தன்மை மற்றும் கலாசார சங்கமத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடே இது.

முதல் காசி தமிழ் சங்கமத்தின் போது, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால், 13 இந்திய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார். அதை தொடர்ந்து, 2023 காசி தமிழ் சங்கமத்தில், 15 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பும், 118 தொகுதிகளாக, 46 பழங்கால இலக்கிய நுால்களின் பிரெய்லி மொழி பெயர்ப்பும் வெளியிடப்பட்டன.

13 மொழிகளில்

தற்போது நடந்து வரும் காசி தமிழ் சங்கமத்தில், 41 தமிழ் இலக்கிய படைப்புகளின் ஹிந்தி மொழி பெயர்ப்பை, உ.பி., முதல்வருடன் இணைந்து நான் வெளியிட்டேன். சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம், இலக்கண துறைகளில் அகத்தியரின் பங்களிப்புகள், இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் முக்கிய கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில், உரையை உடனடியாக மொழி பெயர்ப்பதற்காக அனுவாதினி, பாஷினி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான போட்டி தேர்வுகள், தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகின்றன.

கடந்த, 2024 செப்டம்பரில், சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி, 'சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும்' என்று அறிவித்தார். உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவிலேயே பழமையான மொழியாகவும் தமிழ் இருப்பது, தேசிய பெருமை வாய்ந்தது. பாரதியாரின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், பாரதிய இலக்கிய திருவிழாவை கொண்டாட துவங்கினோம்.

தமிழுக்கு முக்கியத்துவம்

கடந்த ஆண்டு, 15 நாட்கள் நடந்த கொண்டாட்டங்களில், கோடிக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பாரதியார் இருக்கையை நிறுவி, தமிழகத்தின் தனித்துவமான இலக்கிய, கலாசார மரபை கொண்டாட, மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள், தேசிய, உலக அளவில் தமிழை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசின் உறுதிக்கு சான்றாகும்.

அரசியலமைப்பின், 8வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள, அனைத்து இந்திய மொழிகளையும், பாரதிய மொழிகளாக கருதுகிறோம். அதன்படி, தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் வளமான மொழி பாரம்பரியமும், ஆழமான, அசைக்க முடியாத மொழிக்கான மரியாதையும், தேசிய கல்வி கொள்கையின் மையமாக உள்ளது.

உறுதி செய்கிறது

ஒவ்வொரு மாணவருக்கும், அவரவர் தாய்மொழியில் தரமான கல்வி கிடைப்பதை, இக்கொள்கை உறுதி செய்கிறது. தமிழ் என்பது ஒரு மாநில அடையாளம் மட்டுமல்ல, ஒரு தேசிய பொக்கிஷம் என்பதை, தேசிய கல்வி கொள்கை உறுதிப்படுத்துகிறது.

எந்தவொரு மாநிலம் அல்லது சமூகத்தின் மீது, எந்த ஒரு மொழியையும் திணிக்கும் கேள்விக்கு இடமே இல்லை என்பதை, சந்தேகத்திற்கு இடமின்றி கூற விரும்புகிறேன். தேசிய கல்வி கொள்கை, மொழி சுதந்திரத்தை நிலைநிறுத்துகிறது. மாணவர்கள் விரும்பும் மொழியில் தொடர்ந்து கற்பதை உறுதி செய்கிறது.

பல பத்தாண்டுகளாக, நம் கல்வி முறையில் படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் கற்பித்தலை புதுப்பித்து, வலுப்படுத்துவதை, தேசிய கல்வி கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது.

கடந்த, 1968 முதல், இந்திய கல்வி கட்டமைப்பின் முதுகெலும்பாக உள்ள மும்மொழி கொள்கையை, ஒரு முக்கியமான கட்டத்திற்கு இக்கொள்கை கொண்டு வருகிறது. துரதிருஷ்டவசமாக, மும்மொழி கல்வி கொள்கை சரியாக செயல்படுத்தப்படவில்லை. இது, பள்ளிகளில் இந்திய மொழிகளை முறையாக கற்பிப்பதில் சரிவுக்கு வழிவகுத்தது. காலப்போக்கில், வெளிநாட்டு மொழிகளை அதிகமாக நம்பியிருப்பதற்கு வழிவகுத்தது. இந்த வரலாற்று தவறுகளை சரிசெய்ய, தேசிய கல்வி கொள்கை, 2020 முயற்சிக்கிறது.

பொருத்தமற்றது

தமிழகம் எப்போதும், சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தில், ஒளிவிளக்காக இருந்து வருகிறது. இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களில் சிலவற்றுக்கு முன்னோடியாக, தமிழகம் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக, தேசிய கல்வி கொள்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இதனால், தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் இக்கொள்கை வழங்கும் மகத்தான வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தேசிய கல்வி கொள்கை நெகிழ்வானதாகவும், மாநிலங்கள் தங்கள் தனித்துவமான கல்வி தேவைகளுக்கு ஏற்ப, அதன் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ளவும் அனுமதிக்கிறது.

சமக்ர சிக் ஷா போன்ற மத்திய அரசின் ஆதரவு திட்டங்கள், தேசிய கல்வி கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள், தேசிய கல்விக் கொள்கையில் முன்மாதிரி பள்ளிகளாக கருதப்படுகின்றன. எனவே, தேசிய கல்வி கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பதும், முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை, தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக அச்சுறுத்தல்களாக மாற்றுவதும் பொருத்தமற்றது.

பிற்போக்குத்தனமானது

பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதம், கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை முழுமையாக மறுப்பதாகும். தேசிய கல்வி கொள்கை, எந்த மொழியையும் திணிப்பதை ஆதரிக்கவில்லை. அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும், பா.ஜ., ஆளாத பல மாநிலங்கள் இக்கொள்கையை செயல்படுத்தியுள்ளன. தேசிய கல்வி கொள்கை, கல்வி தளத்தை விரிவாக்குவதை நோக்கமாக கொண்டது; குறுக்குவதை அல்ல.

எனவே, அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை முழுமையாக ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன். இக்கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள், முழுமையாக நிதியை பெறுகின்றன. அறிவியல் கல்விக்கு முக்கியத்துவம், 8ம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே கற்பதற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமக்ர சிக் ஷா, பி.எம்.ஸ்ரீ பள்ளி போன்றவற்றை ஏற்காதாதால், வெறும் 2,500 கோடி ரூபாய் அல்ல, மொத்தம், 5,000 கோடி ரூபாய் வரையிலான நிதியை, தமிழகம் இழக்கிறது.

மீண்டும் கூறுகிறேன். தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதாக, பொறுப்புள்ள அரசு பதவிகளில் இருப்பவர்களே பரப்பக்கூடாது. மாணவர் நலனுக்கான இந்தக் கொள்கையை, தமிழகம் நிராகரிப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது. புதிய கல்விக் கொள்கையை நாடு முழுதும் அமல்படுத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

மொழிப்போருக்கு துாண்டும் மத்திய அரசு


பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் தரமான கல்வி தருவதாக மத்திய அரசு கூறுகிறது. தமிழக அரசு தற்போதே தரமான கல்வி தான் தந்து கொண்டிருக்கிறது. பி.எம்.ஸ்ரீ., திட்டம் வாயிலாக, மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை புகுத்த நினைக்கிறது.

புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும். இந்தியாவில் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறோம். இடைநிற்றல், 16 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைந்துள்ளது. மும்மொழி கொள்கை வாயிலாக, மீண்டும் ஒரு மொழிப் போருக்கு மத்திய அரசு தமிழகத்தை துாண்டுகிறது. - அமைச்சர் மகேஷ் தமிழக பள்ளி கல்வித்துறை

நிறுத்தப்பட்டுள்ள நிதியை வழங்கணும்!


மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்காவிட்டால், 5,000 கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாக வரும் செய்தி, மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருமொழி கொள்கையின் அவசியம், சிறப்பு பற்றி, அண்ணாதுரை போன்ற தலைவர்கள், மத்திய அரசுக்கு எடுத்துரைத்தனர். அதனால்தான், மத்திய அரசும் அலுவல் மொழிச் சட்டம் 1963ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தது. அதன் அடிப்படையில், அலுவல் மொழிகள் விதி - 1976 வகுக்கப்பட்டு, இன்று வரை தமிழகத்தில் தாய்மொழியான தமிழ், தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது.

இத்தகைய அறிவுசார்ந்த முடிவால்தான், தமிழக மாணவர்கள் தாய்மொழி புலமையுடன் ஆங்கிலத்தையும் கற்று, உலகம் முழுதும் பல உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர்; தொழில்களையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திற்கு மும்மொழி கொள்கை தேவையற்றது என்பதில் அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. இந்த உண்மையை உணர்ந்து, தமிழகத்தில் மும்மொழி கொள்கை திணிப்பை, மத்திய அரசு கைவிட வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை எனக் கூறி, சமக்ரா சிக் ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை வழங்க மறுக்கக் கூடாது.

இது தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்களுக்கு மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும். நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ள நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். - பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

வர்த்தக‌ விளம்பரங்கள்